30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. சீர்காழி தென்பாதியில் மரம் வேரோடு சாய்ந்தது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. சீர்காழி தென்பாதியில் மரம் வேரோடு சாய்ந்தது.
30 ஆயிரம் ஏக்கர் மழைநீரில் மூழ்கின
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இன்னும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் சம்பா மற்றும் தாளடி நெற் பயிர்கள் நீரில் மூழ்கின. மழையின் காரணமாக மயிலாடுதுறை பகுதியில் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்தன.
மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சியில் பலத்த மழையின் காரணமாக தெருக்களில் இருந்த மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அந்த மரங்கள் அனைத்தும் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா ராபர்ட் தலைமையிலான குழுவினர் அப்புறப்படுத்தினர். மயிலாடுதுறை அருகே சேத்தூர், மறையூர், அகரகீரங்குடி, மாப்படுகை, கீழமருதநல்லூர் ஆகிய கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின.
மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம், தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, கொள்ளிடம், மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்மழை காரணமாக 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன. அதில் 25 சதவீதம் பயிர்களுக்கு மேல் காப்பாற்ற முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
கொள்ளிடம்
கொள்ளிடம் ஆறு, பழையார் பகுதியில் இருந்து வங்கக்கடலில் கலக்கிறது. தற்போது வடகிழக்கு பருவ மழை காரணமாகவும், காவிரியில் வெளியேற்றப்படும் உபரி நீராலும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் அதிகரித்து காணப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் 2005-ம் ஆண்டு மற்றும் 2018-ம் ஆண்டுகளில் வெள்ளப்பெருக்கின் போது கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் உடைப்பு ஏற்பட்ட அளக்குடி பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரை வலுவிழந்து காணப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் தென் கரையையும். மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ஹெத்தேஸ்குமார் மக்வாணா மற்றும் மயிலாடுதுறை கலெக்டர் லலிதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ். மயிலாடுதுறை வடிநில கோட்ட செயற்பொறியாளர் தட்சிணாமூர்த்தி. சீர்காழி உதவி கலெக்டர் நாராயணன். சீர்காழி தாசில்தார் சண்முகம். கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு, மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், எடமணல், கொண்டல், திருமுல்லைவாசல், உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழையால் சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட தென்பாதியில் மரம் வேரோடு சாய்ந்தது. ெதாடர்ந்து எம்.ஆர்.ஆர். ராதாநகர், ஸ்ரீகணபதி நகர், வ.உ.சி. தெற்கு தெரு, மாரிமுத்து நகர், தட்சிணாமூர்த்தி நகர், கற்பகம் நகர், வைத்தியநாதநகர், சன்சிட்டி நகர், சுபஸ்ரீ கார்டன் நகர் உள்ளிட்ட பல்வேறு நகர்களில் சாலை மற்றும் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதேபோல் வைத்தீஸ்வரன்கோவில் பேருராட்சி பகுதிக்குட்பட்ட வள்ளுவர்தெரு, கீழத்தெரு, மணல்மேடு சாலை, கீழவீதி, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. சீர்காழி தாலுகா உட்பட்ட பல்வேறு கிராமங்களில் தாழ்வான பகுதியில் நடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது.
இதேபோல் திருமுல்லைவாசல் தொடுவாய் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் தொடர்ந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தங்களுடைய படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் தொடர் மழையால் சுனாமி குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மீனவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். சீர்காழி தென்பாதியில் புளியமரம் வேரோடு சாய்ந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மீனவர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
திருக்கடையூர்
திருக்கடையூர் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று பெய்த கனமழையால் திருக்கடையூர், பிள்ளைபெருமாநல்லூர், டி.மணல்மேடு, கிள்ளியூர், கண்ணங்குடி, நட்சத்திர மாலை, வளையல்சோழகன், மாத்தூர், ஆக்கூர், கிடங்கள், மாமாகுடி, காலமநல்லூர், மருதம் பள்ளம், மடப்புரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு செய்யப்பட்ட 1,500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மேற்கண்ட பகுதியை சுற்றியுள்ள மழையால் சாலைகள் சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
திருக்கடையூர் ஊராட்சிக்குட்பட்ட ஓடக்கரை சாம்பக்குளம் பகுதி வழியாக செம்பனார்கோவில் செல்லும் சாலையில் கனமழையால் உடைப்பு ஏற்பட்டு பெரும் பள்ளம் ஏற்பட்டது. துண்டிக்கப்பட்ட சாலையை திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் பார்வையிட்டு மண் மூட்டைகளை அடுக்கி பொக்லின் எந்திரம் மூலம் சீரமைக்கப்பட்டது.
திருக்கடையூர் அருகே டி.மணல்மேடு ஊராட்சிக்கு உட்பட்ட நட்சத்திரமாலை கிராமத்தை சேர்ந்த சாமிதுரை (வயது 55) என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
கொள்ளிடம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைக்கரை சத்திரம், பூசை நகர் தாண்டவன் குளம், கொட்டாய் மேடு சுனாமி நகர், மேட்டு தெரு, சித்தி விநாயகபுரம், தைக்கால், பழையார் சுனாமி நகர், தர்காஸ், பழைய பாளையம் ஆகிய பகுதிகளில் சாலைகள் மற்றும் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது.. மழை நீர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொக்லின் எந்திரம் மூலம் வடிகால் வசதி அமைக்கும் பணி நடைபெற்றது. தொடர் மழையால் கொள்ளிடம் பகுதியின் முக்கிய பாசன வாய்க்காலான தெற்கு ராஜன் வாய்க்கால், புது மண்ணியாறு, பொறை வாய்க்கால் ஆகிய வடிவாய்க்கால்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. கொள்ளிடம் பகுதியில் பள்ளமான இடங்களில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மடவா மேடு கிராமத்தில் இருந்து புதுப்பட்டினம் செல்லும் சாலையில் வடிகால் மதகு உள்ளது.அதில் அடைப்பு இருப்பதால் தண்ணீர் வடியமுடியாமல், மழைநீர் வயல்களில் தேங்கி உள்ளது. சாலைகளை சேதப்படுத்தி உள்ளது. பழைய பாளையம், வேட்டங்குடி, உமையாள் பதி, பச்சை பெருமாநல்லூர், ஆமா பள்ளம், எடமணல், திருமுல்லைவாசல் வழுதலை குடி ஆகிய கிராமப்பகுதிகளில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. பழையார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் 5-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் பழையார் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
திருவெண்காடு
தொடர் கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ஹெத்தேஸ்குமார் மக்வாணா, தென்னலக்குடி கிராமத்திற்கு வந்தார். அந்த கிராமத்தில் உள்ள கூப்பிடுவான் உப்பனாறு பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆற்றின் மூலம் வெள்ள நீர் வடிய கூடிய அளவுகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் வானகிரி மீனவர் கிராமத்தில் உள்ள பல்நோக்கு பேரிடர் சேவை மைய கட்டிடத்தை பார்வையிட்டார். அப்போது அவரிடம் பேரிடர் காலத்தில் பாதிக்கப்படும் மக்களை இந்த கட்டிடத்தில் தங்க வைப்பது குறித்தும், மக்களுக்கு செய்யப்பட்டுள்ள தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதி, உணவு தயாரிக்கும் அமைப்பு உள்ளிட்டவைகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன் கண்காணிப்பு அலுவலரிடம் விளக்கி கூறினார். பின்னர் பழைய கரம் பகுதியில் தேங்கியுள்ள வெள்ள நீரை அகற்றும் பணியை பார்வையிட்டார். பின்னர் வைத்தீஸ்வரன்கோவில் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற அவர், சுகாதார நிலையத்தில் தேவையான மருந்துகள் இருப்பு உள்ளதா? போதுமான டாக்டர்கள் பணியில் இருக்கின்றார்களா? என கேட்டறிந்தார். இதனையடுத்து அளக்குடி, பழையபாளையம் பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, திருவெண்காடு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் பயிரை மழைநீர் மூழ்கடித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். ராதாநல்லூர், மங்கைமடம், நாங்கூர், திருவாலி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. செல்லன் ஆற்றின் முகத்துவாரம் தூர்ந்து மேடாக காட்சியளிக்கிறது. இதனால் வெள்ள நீர் வடிவத்தில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. பெருந்தோட்டம், சின்ன பெருந்தோட்டம், வடபாதி, தென்பாதி, நெய்தவாசல் உள்ளிட்ட கிராமங்களில் விளைநிலங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு அள்ளி விளாகம், செம்பதனிருப்பு, ராதாநல்லூர், நடராஜபிள்ளை சாவடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது செங்கரும்பு பயிர் செய்துள்ள நிலத்தில் மழை நீர் சூழ்ந்து உள்ளது. சில நாட்களில் மழை நீர் வடியவில்லை என்றால் கரும்பின் சுவை குறைந்துவிடும் என்றும், இதனால் வியாபாரிகள் வாங்க முன்வரமாட்டார்கள் என கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story