வளரி ஏந்திய வீரனின் பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
ஆண்டிப்பட்டி அருகே மூனாண்டிபட்டியில், வளரி ஏந்திய நிலையில் இருக்கும் வீரனின் பாறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேனி:
பாறை ஓவியம்
ஆண்டிப்பட்டி அருகே மூனாண்டிபட்டியில் பழமையான பாறை ஓவியங்கள் உள்ளன. இந்த பாறை ஓவியங்களை வைகை தொல்லியல் பண்பாட்டுக்கழக நிறுவனர் பாவல்பாரதி ஆய்வு செய்தார்.
அப்போது அவர், பழமையான வளரி ஏந்திய வீரன் தனித்து நிற்கும் ஓவியத்தை கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து பாவல்பாரதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஓவியத்தை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர்கள் இதனை ஆயுதம் ஏந்திய வீரர்கள் என பொதுவாக பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் இப்பாறை ஓவியத்தை மேலாய்வு செய்தபோது வாள் ஏந்திய மனிதர்களுக்கு கீழே பழந்தமிழரின் ஆயுதமான வளரி ஏந்திய வீரன் ஒருவர் தனித்து நிற்பதை கண்டறிந்தேன்.
இதில், வெள்ளை வண்ணத்தில் இடுப்பில் வாள் உறையுடன் கையில் வாள் ஏந்திய வீரர்களும், ஒரே தொடர் வரிசையில் செல்லும் வீரர்களும், குதிரையின் மேல் செல்லும் வீரன், சந்திரன், சூரியன், சூலாயுதம், ஊர்ந்து செல்லும் விலங்கு போன்ற உருவங்களும் வரையப்பட்டுள்ளன.
வளரி ஏந்திய வீரன்
அத்துடன் மங்கலான வெள்ளை நிறத்தில் விலங்கு, மனித உருவங்களும் சிவப்பு வண்ணத்தில் நீண்ட கோட்டுருவங்களும் அழிந்த நிலையில் உள்ளன. இதில் தனித்து நிற்கும் வளரி வீரன் ஓவியம் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும்.
இதுவரை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் பாறை ஓவியங்களில் வில் அம்பு, வாள், வேல், தடி ஏந்திய வீரர்களின் உருவமே பரவலாகக் கிடைத்துள்ளன. வளரி ஆயுதம் கிடைத்ததாக தெரியவில்லை. அந்த வகையில் வளரி என்று தெளிவாக தெரியும் பாறை ஓவியம் இதுவே ஆகும்.
தேனி, திண்டுக்கல்
வளரி என்பது தென் தமிழ்நாட்டிலும், ஆஸ்திரேலியாவிலும் வழக்கத்தில் இருந்த பழமையான ஆயுதமாகும். இதனை ஆஸ்திரேலியாவில் பூமராங் என்று அழைப்பர். தமிழ்நாட்டில் இன்றைய தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் பகுதியில் இந்த ஆயுதம் 1801-ம் ஆண்டு வரை வழக்கத்தில் இருந்தது.
இதை பயன்படுத்தி நவாப்புகளையும், ஆங்கிலேயர்களையும் இப்பகுதி வீரர்கள் தாக்கியது குறித்து ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆவணங்கள் பதிவு செய்துள்ளன. 1802-ம்ஆண்டு முதல் வளரி ஆயுதம் பயன்படுத்துவது ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்டது.
தற்போது கருமாத்தூர் அருகே கோவிலாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கோவிலில் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது. இந்த வளரி என்ற ஆயுதம், பாறை ஓவியங்களில் கிடைத்திருப்பது புதிய ஆய்வுகளுக்கு துணை செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story