புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி புதுக்கோட்டையில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை:
பெருமாள் கோவில்கள்
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் பக்தர்கள் விரதம் இருந்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதிலும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது உண்டு. இந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழகைளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் வழிபாடு நடத்த முடியாமல் போனது.
கடந்த 4 வார சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்கள் நடை சாத்தப்பட்டிருந்ததால் பக்தர்கள் கோவில் முன்பு நின்று பெருமாளை நினைத்து வழிபட்டனர். மேலும் கோபுர தரிசனம் செய்தனர். இந்த நிலையில் வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கான தடை நேற்று முன்தினம் முதல் நீக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பக்தர்கள் சாமி தரிசனம்
இந்த நிலையில் புரட்டாசி மாதத்தில் 5-வது மற்றும் கடைசி சனிக்கிழமையான நேற்று புதுக்கோட்டையில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. கடந்த 4 வாரங்களாக தரிசனம் செய்ய முடியாமல் தவித்த பக்தர்கள் நேற்று மகிழ்ச்சியுடன் பெருமாளை தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை கீழ 3-ம் வீதியில் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று பெருமாள், தாயாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல திருக்கோகர்ணம் சீனிவாச பெருமாள் கோவில், விட்டோபா பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவில்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டன. இதேபோல புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஜெயவீர ஆஞ்சநேய கோவிலில் 28 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
ஆவுடையார்கோவில்
ஆவுடையார்கோவில் அருகே பரமந்தூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பரமந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
இதேபோல் ஆவுடையார்கோவில் வடநகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீற்றிருந்த சிவயோக நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
அறந்தாங்கி, கீரனூர்
அறந்தாங்கி அருகே பெருமாள்பட்டியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கீரனூர் அருகே குளத்தூர் வரதராஜ பெருமாள் கோவில், மலையடிப்பட்டி கண்திறந்த பெருமாள் கோவில், களமாவூர் கற்பகாம்பாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story