தாராபுரம் ரெயில் பாதை திட்டம் நிச்சயம் கொண்டு வரப்படும் என்று மக்கள் ஆசி யாத்திரை நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.


தாராபுரம் ரெயில் பாதை திட்டம் நிச்சயம் கொண்டு வரப்படும் என்று மக்கள் ஆசி யாத்திரை நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
x
தினத்தந்தி 17 Aug 2021 10:53 PM IST (Updated: 17 Aug 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் ரெயில் பாதை திட்டம் நிச்சயம் கொண்டு வரப்படும் என்று மக்கள் ஆசி யாத்திரை நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

திருப்பூர்:
தாராபுரம் ரெயில் பாதை திட்டம் நிச்சயம் கொண்டு வரப்படும் என்று மக்கள் ஆசி யாத்திரை நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
மக்கள் ஆசி யாத்திரை
தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரியாக சமீபத்தில் பொறுப்பு ஏற்றார். புதிதாக மத்திய மந்திரியாக பதவியேற்றவர்கள் தங்களது மாநிலங்களுக்கு சென்று மக்களை சந்தித்து ஆசி பெற வேண்டும் என்றும், மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி கட்சியை வலுப்படுத்தி மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டது.
அதன்படி தமிழகத்தில் பா.ஜனதா கட்சியை வலுப்படுத்துவதற்காக மத்திய மந்திரி எல்.முருகன் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் மக்கள் ஆசி வேண்டி யாத்திரை என்ற பெயரில் பிரசார வாகனம் மூலம் பயணம் மேற்கொள்ள தமிழக பா.ஜனதா ஏற்பாடு செய்தது. இதைத்தொடர்ந்து கோவையில் யாத்திரையை தொடங்கி நேற்று முன்தினம் இரவு திருப்பூர் வந்தார். குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மத்திய மந்திரி எல்.முருகன் யாத்திரையில் பங்கேற்று மக்களிடம் ஆசி பெற்றார். பின்னர் இரவு ஆண்டிப்பாளையத்தில் உள்ள கட்சி நிர்வாகி வீட்டில் தங்கினார்.
தியாகி சுந்தராம்பாள் சிலைக்கு மரியாதை
நேற்று காலை முன்னாள் மாநில தலைவரும், கேரள மாநில பொறுப்பாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு சென்ற மத்திய மந்திரி எல்.முருகன் அங்கு காலை உணவு சாப்பிட்டார். அதன்பிறகு பா.ஜனதா கட்சியின் மக்கள் சேவை மையத்துக்கு சென்று அங்கிருந்த கட்சி நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார். குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் மத்திய மந்திரியை சந்தித்து, ரூ.1 லட்சத்தை பயனாளியின் பங்களிப்பாக வாரியத்துக்கு செலுத்தினால் வீடு ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்படும் என்றும், கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம் என்றும் கூறினர். இதன்காரணமாக தற்போதைக்கு பணம் இல்லாமல் குடிசை மாற்று வாரிய வீடு ஒதுக்கீடு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் முறையிட்டனர்.
பின்னர் திருப்பூர்-பல்லடம் ரோடு வீரபாண்டி பிரிவில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி சுந்தராம்மாள் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜனதா தமிழக தலைவர் அண்ணாமலை ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள். தியாகி சுந்தராம்பாள் சிறு வயது முதல் சுதந்திர போராட்டத்தில் நாட்டம் கொண்டு இருந்தார். 1928-ம் ஆண்டு காந்தி திருப்பூர் வந்தபோது, பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற சுந்தராம்பாள் தனது நகைகளை ஏழை மக்களுக்காக கழற்றிக்கொடுத்தார். காந்தியின் கோரிக்கைப்படி கதர் ஆடையை சுந்தராம்பாள் கடைசிவரை அணிந்து வந்தார். தனது 3 மாத கைக்குழந்தையுடன் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்.
வீரர்களுக்கு வாழ்த்து
சுந்தராம்பாளின் மருமகள் மற்றும் பேரன்களை சந்தித்த  எல்.முருகன், அவர்களுக்கு மாலை அணிவித்து ஆசி பெற்றார். பின்னர் பட்டியலின மாணவர்களை சந்தித்தார். பட்டதாரி மாணவர்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை மனு கொடுத்தனர். பின்னர் தேசிய அளவில் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மாணவி ஹரிணி, பீச் வாலிபால் போட்டியில் தேசிய அளவில் தங்கம் வென்ற பள்ளி மாணவன் தரணீஷ், ஜூடோ போட்டியில் தேசிய அளவில் தங்கம் வென்ற மாணவன் மணிவேலன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தாராபுரம் சென்றார்.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாநில பொதுச்செயலாளர் செல்வக்குமார், மாநில செயலாளர் மலர்க்கொடி, மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கதிர்வேல், சீனிவாசன், காடேஸ்வரா தங்கராஜ், சமூக ஊடகபிரிவு மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
வரவேற்பு
பின்னர் தாராபுரத்தில் உள்ள உடுமலை ரவுண்டானாவில் மத்திய மந்திரி எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு பா.ஜனதா தெற்கு மாவட்ட தலைவர் பொன் ருத்ரகுமார் தலைமையிலும், பட்டியலின அணி மாநில செயலாளரும், மேற்கு மண்டல பெருங்கோட்ட பொறுப்பாளருமான எஸ்.எம்.ரங்கராஜன் தலைமையிலும் 500-க்கும் மேற்பட்டவர்கள் மேளதாளத்துடன் கரகாட்டம், ஒயிலாட்டம் நிகழ்ச்சியுடன் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் தாராபுரம் போலீஸ் நிலையம் அருகே மக்கள் ஆசி வேண்டி யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கேயம் நகர பஸ் நிலையத்தின் முன்பு காங்கேயம் காளையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தாராபுரம் ரெயில்பாதை திட்டம்
தாராபுரம் மற்றும் காங்கேயத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-
தாராபுரம் மக்கள் என் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளீர்கள். முதல்முறையாக பிரதமர் மோடி தாராபுரம் வந்து மக்கள் மத்தியில் பேசி பெருமை சேர்த்தார். 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எனக்கு வாக்களித்தீர்கள். சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் கூட தமிழருக்கு ஒரு மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் என்னை மத்திய மந்திரி ஆக்கியிருக்கிறார்.
எனது பாட்டன் செருப்பு தைத்து கொண்டிருந்தவர். எனது அப்பா-அம்மா இன்றும் விவசாய வேலை செய்து வருகிறார்கள். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு பெரும் வாய்ப்பை வழங்கியுள்ளார். தாராபுரம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ரெயில் வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரிடம் தெரிவித்தோம். பிரதமர் மோடி, தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று ரெயில் பாதை குறித்து பேசினார். தாராபுரம் வளர்ச்சி, முன்னேற்றம் நமது தாரகமந்திரமாக இருக்கும். தாராபுரம் ரெயில் பாதை திட்டத்தை கொண்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுத்து நிச்சயமாக கொண்டு வருவோம்.
திட்டமிட்டு குழப்பம்
பிரதமர் 43 புதிய மந்திரிகளை நியமித்தார். புதிய மந்திரிகளை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து வைப்பது மரபு. ஆனால் அறிமுகம் செய்யவிடாமல் தி.மு.க.,  காங்கிரஸ் கட்சியினர் குழப்பம் ஏற்படுத்தினார்கள். புதிதாக நியமிக்கப்பட்ட மந்திரிகள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள். பட்டியலின பிரிவை சேர்ந்தவர்கள் 12 பேர், மலைவாழ் மக்களை சேர்ந்த 8 பேர், ஓ.பி.சி.யை சேர்ந்த 28 பேர், 12 பெண்கள் மந்திரிகளாக இருந்தனர். இவர்கள் அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள் இல்லை. விவசாய கூலி வேலை செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
இதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். அதனால் தான் மக்களிடம் சென்று மக்களை சந்தித்து ஆசி வாங்க வேண்டும் என்று வந்துள்ளோம். மந்திரியாக வேண்டும் என்றால் எம்.பி.யாக இருக்க வேண்டும். ஆனால் எம்.பி. இல்லாத, பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை முதன்முறையாக மந்திரியாக்கியாக்கியவர் பிரதமர் மோடி. தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக என்னை மந்திரியாக நியமித்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
அன்பு என்றும் குறையாது
நிகழ்ச்சியில் பா.ஜனதா தமிழக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
தாராபுரத்தில் போட்டியிட்டு 88 ஆயிரம் வாக்குகளை பெற்ற எல்.முருகனை பிரதமர் மோடி மத்திய மந்திரி ஆக்கியுள்ளார். உண்மையான சமூகநீதியை பா.ஜனதாவில் தான் பார்க்க முடியும். தி.மு.க.வினர் பொய்யான சமூகநீதியை பேசி வருகிறார்கள். பா.ஜனதாவை பொறுத்தவரை மக்களுக்கும், அரசியலுக்கும் எந்தவித இடைவெளியும் இருக்காது. மக்களிடம் நேரடியாக ஆசி பெறுவதற்காக இந்த யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. தாராபுரம் தொகுதியில் குறைந்த வாக்குவித்தியாசத்தில் தோற்றாலும் கூட, தாராபுரம் மக்கள் மீது அன்பு என்றும் குறையாது. நேரடியாக உங்களிடம் நன்றியை கூறி ஆசி பெறுவதற்காக மத்திய மந்திரி எல்.முருகன் வந்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.கார்வேந்தன், மாநில பட்டியலின அணி தலைவர் பொன்பால கணபதி, மாவட்ட பொருளாளர் கொங்கு ரமேஷ், துணைத்தலைவர்கள் சுகுமார், மங்களம் ரவி, சிவசுப்பிரமணியம், செல்வா பழனிசாமி, மாவட்ட செயலாளர் விஜயகுமார், இளைஞரணி தலைவர் யோகி என்கிற யோகிஸ்வரன், காந்தி, அலுவலக செயலாளர் ஈஸ்வரன், அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் பி.கே.ராஜ், நகர செயலாளர் டி.டி.காமராஜ், மாவட்ட பொருளாளர் சின்னப்பன், பழனி முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சிவக்குமார், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் பங்க் மகேஷ்குமார், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் டி.பி.எம். ஆத்திக், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் பைப் சாமிநாதன், மூலனூர் ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், மாவட்ட கவுன்சிலர் பானுமதி கருணாகரன், மாவட்ட மகளிரணி செயலாளர் ரேவதிகுமார், முன்னாள் பொன்னிவாடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், காங்கேயம் பா.ஜனதா நகர தலைவர் கலா நடராஜன், திருப்பூர் தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சிவபிரகாஷ், பொதுச்செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய தலைவர்கள் ஆனந்தகுமார், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story