கோவில்களில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை


கோவில்களில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 8 Aug 2021 10:28 PM IST (Updated: 8 Aug 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்ட கோவில்களில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை பக்தர்கள் இன்றி நடந்தது.

கூடலூர்

நீலகிரி மாவட்ட கோவில்களில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை பக்தர்கள் இன்றி நடந்தது. 


சாமி தரிசனத்துக்கு தடை

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. 

நீலகிரி மாவட்டத்தில் ஆடி அமாவாசையையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 17 கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆனால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. 

சிறப்பு பூஜை

ஊட்டி, பொக்காபுரம், மேல்கூடலூர் சந்தக்கடை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில்களில் காலை 6 மணிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆனால் கோவில் நுழைவுவாயில்கள் திறக்கப்படவில்லை. இதனால் பல பக்தர்கள் வெளியில் நின்று தரிசனம் செய்துவிட்டு திரும்பினர். இதேபோன்று ஊட்டி சுப்பிரமணிய சுவாமி, இரட்டை பிள்ளையார், எல்க்ஹில் முருகன், கூடலூர் சக்தி விநாயகர் உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளும் ரத்து செய்யப்பட்டது. 

பூசாரிகள் மட்டும்...

கோத்தகிரி பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆனால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால், பூசாரிகள் மட்டும் கோவிலை திறந்து அபிஷேக, அலங்கார பூஜைகளை நடத்தினர். டானிங்டன் பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதே போல கடைவீதி மாரியம்மன் கோவில் மற்றும் பண்ணாரி அம்மன் கோவில்களிலும் ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பந்தலூர் முருகன் கோவில், எருமாடு சிவன் கோவில், கொளப்பள்ளி மாரியம்மன் கோவில், செம்பக்கொல்லி மாரியம்மன் கோவில், சேரம்பாடி விநாயகர் கோவில், பிதிர்காடு தஞ்சோரா மாரியம்மன் கோவில், நெல்லியாளம் மாரியம்மன் கோவில், மழவன் சேரம்பாடி மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.


Next Story