தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவலம்
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு உரிய படுக்கை வசதிகள் செய்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த மருத்துவமனைக்கு தஞ்சை மாவட்டம் மட்டும் அல்லாது அருகில் உள்ள புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இங்கு ஏராளமானோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாலும் புறநோயாளிகளாக ஆயிரக்கணக்கானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்த மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளதால் நோயாளிகளும் நம்பிக்கையுடன் வந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குறிப்பாக இந்த மருத்துவமனைக்கு ஏழை, எளிய மக்கள் தான் அதிக அளவில் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். கொரோனா தொற்று அதிகரித்து வந்த காலக்கட்டத்தில் இதர நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. தற்போது தொற்று குறைந்து வருவதையடுத்து இதர நோய்க்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இது தவிர உள்நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அவ்வாறு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு உரிய படுக்கைகள் கிடைப்பது இல்லை. இதனால் அவர்கள் தரையில் பாய் விரித்தோ? அல்லது போர்வை போன்றவற்றை விரித்து அதில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரும்பாலானோர் ஏழைகள் தான். அவர்கள் மருத்துவமனைக்கு வந்தால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கையுடன் வருவர். ஆனால் உரிய படுக்கை வசதிகள் இல்லாமல் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிப்பதால் அது கேள்விக்குறியாக உள்ளது. மருத்துவமனைக்கு பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வருவார்கள்.
மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 29-வது வார்டில் மட்டும் அல்ல, பல்வேறு வார்டுகளிலும் இது போன்று தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்குள்ள படுக்கையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குணமடைந்து வெளியேறும் போது தான் தரையில் படுத்திருப்பவர்களுக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படுகிறது. எனவே உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுவர்களுக்கு உரிய படுக்கை வசதிகள் அளித்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்றனர்.
Related Tags :
Next Story