சுங்குடி சேலை உற்பத்தியை பாதுகாக்க சின்னாளபட்டியில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் பேட்டி
சுங்குடி சேலை உற்பத்தியை பாதுகாக்க சின்னாளபட்டியில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் பேட்டியளித்தார்.
சின்னாளபட்டி:
சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. இரா.அருள்(பா.ம.க.) நேற்றுஆத்தூர் தொகுதியில் உள்ள காமராஜர் அணை, குடகனாறு மற்றும் சின்னாளபட்டியில் சுங்குடி சேலை உற்பத்தி செய்யும் இடங்களை பார்வையிட்டார். பின்னர் அனுமந்தராயன்கோட்டையில் குடகனாறு பாசன விவசாயிகளையும், சின்னாளபட்டி அருகே உள்ள ராமநாதபுரத்தில் சாயப்பட்டறை தொழிலாளர்களையும் சந்தித்தார். பின்னர் இரா.அருள் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-குடகனாறு அதன் பாரம்பரிய வழித்தடத்தில் தண்ணீர் செல்லாததால் ஆத்தூர், ரெட்டியார்சத்திரம், திண்டுக்கல், வேடசந்தூர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 300 கிராமங்கள் பாதிப்படைந்துள்ளது. சுமார் 13 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் குடகனாற்று நிலத்தடி நீர் மூலமும் பயன்பட்டு வந்தது. தற்போது அவை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
சின்னாளபட்டியில் உலக பிரசித்தி பெற்ற பாரம்பரியம் மிக்க சுங்குடி சேலை உற்பத்தி பாதிக்காமலிருக்க ‘ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா’ அமைக்க வேண்டும். ஆத்தூர் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். சின்னாளபட்டியில் பல்நோக்கு மருத்துவமனை கட்ட வேண்டும். குடகனாற்று தண்ணீர் பாரம்பரிய வழித்தடத்தில் தடங்களின்றி செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எங்களது இந்த கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்து தீர்வு காண உள்ளோம். அதேபோல் சுங்குடி சேலைக்கு "புவிசார் குறியீடு" வழங்க துணிநூல் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பா.ம.க. மாநில பொருளாளர் திலகபாமா உடன் இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. மாநில துணை பொது செயலாளர்கள் பெ.கோபால், க.ஜோதிமுத்து, ஆத்தூர் ஒன்றிய முன்னாள் ஒன்றிய செயலாளர் நாகேந்திரன், மாநில மாணவரணியை சேர்ந்த கருணாம்பிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story