நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கோவை
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணை மற்றும் குளங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தொடர்மழை
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 3 வாரங்களாக விட்டு விட்டு அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கோவை சுற்று வட்டார பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வரு கிறது.
நேற்று பெய்த மழையால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஓடை களில் நீர்வரத்து அதிகரித்தது. கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பல இடங்களில் புது அருவிகள் உருவாகியுள்ளன.
இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சித்திரைச்சாவடி தடுப்பணை நிரம்பி வழிந்தது.
மேலும் புதுக்குளம், நரசம்பதி, கோளராம்பதி, பேரூர் சொட்டையாண்டி குளம், குனியமுத்தூர் செங்குளம், கங்கநாராயண சமுத்திர குளம் உள்ளிட்ட குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சிறுவாணி அணை
50 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணை நீர்மட்டம் 28.70 அடியாக உயர்ந்துள்ளது.
நேற்று காலை முதலே கோவை மற்றும் புறநகர் பகுதியிலும் மழை தீவிரமாக பெய்தது. சாலைகளில் மழைநீர் தேங்கியது. அதை பீய்ச்சி அடித்தபடி வாகனங்கள் சென்றன.
மழை காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
கோவை அரசு ஆஸ்பத்திரி அருகே மழை மற்றும் காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மரம் முறிந்து விழுந்தது.
அதன் அடியில் நின்ற கார் சேதமானது. அந்த காருக்குள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.
இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மின் வாளால் மரக்கிளைகளை வெட்டி அகற்றினர். சில இடங்களில் சாக்கடை கால்வாய்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மழை அளவு
நேற்று கோவையில் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. 26 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. காற்றின் ஈரப்பதம் 88 சதவீதம் இருந்தது.
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு
சின்கோனா -102, சின்னக்கல்லார் -115, வால்பாறை-93, சோலையார்- 102, ஆழியார்- 4.6, பொள்ளாச்சி- 11, மேட்டுப்பாளையம்-16, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்- 0.5.
இதன் சராசரி 38.2 மில்லி மீட்டர் ஆகும். தொடர் மழையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் முன்எச்சரிக் கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story