திருச்சி மாநகராட்சி எல்லைகள் விரிவாக்கம் வார்டுகளின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த திட்டம்
திருச்சி மாநகராட்சியின் எல்லைகள் விரிவுப்படுத்தப்படுகிறது. வார்டுகளின் எண்ணிக்கையை 65-லிருந்து 100 ஆக உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி,
திருச்சி மாநகராட்சியின் எல்லைகள் விரிவுப்படுத்தப்படுகிறது. வார்டுகளின் எண்ணிக்கையை 65-லிருந்து 100 ஆக உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாநகராட்சி விரிவாக்கம்
திருச்சி நகராட்சி 1866-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. 128 ஆண்டுகளுக்கு பிறகு 1994-ம் ஆண்டு திருச்சி, ஸ்ரீரங்கம், பொன்மலை ஆகிய நகராட்சிகள் மற்றும் கோ-அபிஷேகபுரம், அரியமங்கலம் பேரூராட்சிகளை இணைத்து 60 வார்டுகளுடன் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
தொடர்ந்து, நிர்வாக வசதிக்காக அரியமங்கலம், கோ-அபிஷேகபுரம், பொன்மலை, ஸ்ரீரங்கம் என 4 கோட்டங்களாக பிரிக்கப்பட்டது. பின்னர் 2011-ம் ஆண்டு திருவெறும்பூர் பேரூராட்சி பகுதிகள் இணைக்கப்பட்டு வார்டுகளின் எண்ணிக்கை 60-லிருந்து 65 ஆக உயர்த்தப்பட்டது.
100 வார்டுகளாக மாற்றம்
தற்போது திருச்சி மாநகராட்சியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் திருச்சி மாநகராட்சியின் எல்லைகளை விரிவாக்கி வார்டுகளின் எண்ணிக்கையை 65-லிருந்து 100 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாநகராட்சியை விரிப்படுத்தப்பட உள்ளதாகவும், இது குறித்த அறிப்பை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்று தெரிவித்தார்.
உத்தேச பட்டியல்
இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது:-
மாநகராட்சியின் எல்லையை விரிவாக்கம் செய்து வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்தும் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மக்கள் தொகை அடிப்படையிலும், வாக்காளர்கள் எண்ணிக்கை, மாநகராட்சியையொட்டி உள்ள பகுதிகள், போக்குவரத்து வசதி, அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் போன்ற பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு உத்தேச வரைவுபட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இதற்காக மாநகராட்சியை ஒட்டி உள்ள பகுதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் எந்தெந்த பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என்பது குறித்து இதுவரை இறுதி செய்யப்படவில்லை. இதற்காக தயாரிக்கப்படும் திட்ட அறிக்கையை முறைப்படி சென்னைக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். அதன்பிறகே இறுதி வடிவம் பெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story