கோவில்கள் முன் கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டம்
வழிபாட்டுக்கு திறக்க வலியுறுத்தி திண்டுக்கல் உள்பட 250 இடங்களில் கோவில் முன் கற்பூரம் ஏற்றி வைத்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்:
ஆர்ப்பாட்டம்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் தொற்று பரவல் குறைந்து வருவதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. ஆனால் கோவில்களை திறக்க தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை.
இதையடுத்து தமிழகம் முழுவதும் கோவில்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தும்படி இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.
அதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள் முன்பு இந்து முன்னணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு கோட்ட செயலாளர் சங்கர் கணேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சஞ்சீவிராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி கொடுத்த தமிழக அரசு, கோவில்களை திறக்க அனுமதி கொடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியும், கோவில்களை உடனடியாக திறக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
வேடசந்தூர்
இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக கோவில் நுழைவு வாயில் படிக்கட்டுகளை தண்ணீர் ஊற்றி இந்து முன்னணியினர் சுத்தம் செய்தனர்.
பின்னர் படிக்கட்டுகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்தும், கற்பூரம் ஏற்றியும் இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர். மேலும் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில், ஆஞ்சநேயர், புவனேஸ்வரி அம்மன் கோவில், மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில், திருமலைக்கேணி முருகன் கோவில் உள்பட 25 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதேபோல் வேடசந்தூரில் உள்ள மாரியம்மன், சிவன், முருகன் கோவில்கள் முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட துணை தலைவர் விபூசணன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர்கள் நாகேந்திரன், செல்வக்குமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோவில்களை உடனடியாக திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பழனி
பழனியில் பாதவிநாயகர் கோவில் முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார். மதுரை கோட்ட செயலாளர் பாலன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழகத்தில் உள்ள கோவில்களை திறக்க அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல், மாரியம்மன் கோவில், திருஆவினன்குடி கோவில், ரணகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்கள் முன்பும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்து வியாபாரிகள் சங்க கவுரவ தலைவர் சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் தலைமையில் பாதவிநாயகர் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக இந்து முன்னணியினரும், இந்து வியாபாரிகள் சங்கத்தினரும் பாத விநாயகர் கோவில் முன்பு கற்பூரம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்து முன்னணி சார்பில் மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story