சோலையார் அணை பூங்காவை பராமரிக்க வேண்டும்
வால்பாறை அருகே உள்ள சோலையார் அணை பூங்காவை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வால்பாறை
வால்பாறை அருகே உள்ள சோலையார் அணை பூங்காவை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சோலையார் அணை பூங்கா
மலைப்பிரதேசமான வால்பாறையில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் சோலையார் அணை உள்ளது. 160 அடி உயரம் கொண்ட இந்த அணை பி.ஏ.பி. (பரம்பிக்குளம்-ஆழியாறு) திட்டத்துக்கு அடிப்படை அணையாக உள்ளது.
இந்த அணை கட்டப்பட்ட பின்னர் அணையை ஒட்டி உள்ள பகுதியில் கடந்த 1972-ம் ஆண்டில் பூங்கா அமைக்கப்பட்டது. அதில் குழந்தைகள் விளையாட ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்றுகள், சுற்றுலா பயணிகள் அமர்ந்து சாப்பிட ஓய்வு அறை ஆகியவை அமைக்கப்பட்டது.
பராமரிப்பு இல்லை
இதன் காரணமாக இங்கு வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் குழந்தைகளுடன் வந்து விளையாடிவிட்டு சென்றனர். ஆனால் தற்போது இந்த பூங்கா பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் இங்கு வந்து செல்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.
மேலும் பராமரிக்கப்படாததால், இந்த பூங்காவில் உள்ள அனைத்து விளையாட்டு பொருட்களும் உடைந்து உபயோகப்படுத்த முடியாத நிலையில்தான் உள்ளது. அதுபோன்று இங்குள்ள ஓய்வு அறை பழுதடைந்து காணப்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பொழுதுபோக்கு இடம்
கொரோனா பரவல் காரணமாக தற்போது சுற்றுலா மையங்களுக்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. ஆனால் சோலையார் அணை யில் உள்ள பூங்கா நல்ல பொழுதுபோக்கு இடமாக உள்ளது.
இது தமிழக-கேரள எல்லையில் இருப்பதால் கேரளாவை சேர்ந்தவர்களும் இங்கு வந்து செல்வார்கள். ஆனால் சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவர்ந்து ஈர்க்கும் வகை யில் இங்கு எவ்வித பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லை.
ஆரம்ப நாட்களில் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் யாரும் செல்வது இல்லை. ஆனால் இப்போது அப்படி அல்ல. அங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசிக்க ஏராளமானோர் செல்வது உண்டு.
கூடுதல் வசதிகள்
இந்த பூங்காவை பராமரித்து, கூடுதல் வசதிகளை செய்து கொடுத் தால், பலர் இங்கு வந்து பார்த்து இயற்கையின் அழகை ரசித்துவிட்டு செல்வார்கள். இதனால் அரசுக்கு வருமானமும் கிடைக்கும்.
எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, தற்போது உள்ள நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப ரோப்கார் வசதி, பல்வேறு வகை யான நீரூற்றுகள், விளையாட்டு வசதிகள், தொலைநோக்கு கருவி, வண்ண மீன் காட்சியகம் உள்பட பல்வேறு வசதிகளை வைத்தால் நன்றாக இருக்கும். அதை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story