நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக செந்தாமரை கண்ணன் பொறுப்பு ஏற்பு


நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக செந்தாமரை கண்ணன் பொறுப்பு ஏற்பு
x
தினத்தந்தி 5 Jun 2021 1:48 AM IST (Updated: 5 Jun 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக செந்தாமரை கண்ணன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

நெல்லை:
தமிழ்நாடு சிறப்பு படை ஐ.ஜி.யாக பணியாற்றிய செந்தாமரை கண்ணன், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று மாலை பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவரை போலீஸ் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை பகுதி எனக்கு புதியது கிடையாது. ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவியை தொடங்கினேன். நெல்லையில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி உள்ளேன். எனக்கு இந்த பகுதியை பற்றி எல்லாம் நன்றாக தெரியும். தற்போது கொரோனா காலம் என்பதனால் நோய் பரவலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நோயின் தாக்கத்தை குறைக்கவும் போலீசார் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை எல்லாம் எடுப்ேபாம். 

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, குற்றம் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் குறித்து நன்கு ஆராய்ந்து அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் இருக்க ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்போம். கந்துவட்டி பிரச்சினை, மைக்ரோ கடன் வழங்குதல் உள்ளிட்ட வட்டிக்கு பணம் வாங்கும் விவகாரத்தில் மக்கள் பணம் கொடுத்ததற்கு உரிய ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு முறையான நடவடிக்கை எடுக்க முடியும். இருந்தாலும் கந்துவட்டி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றங்களை குறைக்க நெல்லை மாநகர பகுதியில் பொதுமக்கள், வியாபாரிகள் தங்களுடைய வீடுகள் மற்றும் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். போலீஸ் தரப்பிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை பகுதியில் சாதி கலவரம் ஏற்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். போலீசார் நடுநிலையோடு செயல்படுவார்கள். போலீசார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கபடும். கொரோனா குறைந்த பிறகு பொதுமக்கள் நேரடியாக என்னை சந்தித்து மனு கொடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள செந்தாமரை கண்ணன், கடந்த 1991-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியை தொடங்கினார். பின்னர் நெல்லை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாகவும், சென்னையில் துணை போலீஸ் கமிஷனராகவும், இணை போலீஸ் கமிஷனராகவும், சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடித்த சிறப்பு படை அதிகாரியாகவும், விழுப்புரம், திருச்சி, டி.ஐ.ஜி.யாகவும், சிறப்பு காவல் படை ஐ.ஜி.யாகவும் பணியாற்றி உள்ளார். மேலும் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றிய செந்தாமரை கண்ணன், தற்போது நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்று இருக்கிறார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story