மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் ஊரடங்கு உத்தரவை மீறி திருமணம் - போலீசார் எச்சரித்து சென்றதால் பரபரப்பு
மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் ஊரடங்கு உத்தரவை மீறி திருமணம் நடந்தது. இதனால் கோவில் நிர்வாகத்தினரை போலீசார் எச்சரித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை,
தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் ஒருவார காலத்துக்கு அரசு தளர்வில்லா ஊரடங்கை அறிவித்தது. அதன்படி திருமணம் உள்ளிட்ட விழாக்கள் நடத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மயிலாடுதுறை நகரில் 50-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. இந்த மண்டபங்களில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட திருமணங்களை நடத்தக்கூடாது என்பது குறித்து திருமண மண்டப உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த அறிவுறுத்தலும் முன்கூட்டியே வழங்கப்படவில்லை.
நேற்று சுபமுகூர்த்த தினம் என்பதால் நகரில் பல திருமண மண்டபங்களில் நிச்சயிக்கப்பட்டபடி திருமணங்களை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில் இந்த திருமண மண்டபங்களுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென சென்ற நகராட்சி ஆணையர் சுப்பையா தலைமையிலான அதிகாரிகள் உடனடியாக திருமண மண்டபத்தைவிட்டு வெளியேறும்படி திருமண வீட்டார்களை கட்டாயப்படுத்தினர்.
இதற்கு திருமண வீட்டார் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து திருமண வீட்டார்கள் மண்டபத்தை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். ஆனாலும் ஒரு சில மண்டபங்களில் திருமணவீட்டார் வெளியேற மறுத்து விட்டனர்.
இதன் காரணமாக பல திருமண மண்டபங்களில் நேற்று திருமணம் நடைபெறவில்லை. அருகில் உள்ள சிறிய கோவில்களில் வைத்து பலர் திருமணத்தை நடத்தி முடித்தனர். அதே சமயம் ஒரு சில திருமண மண்டபங்களில் நேற்று காலை வழக்கம்போல திருமணங்கள் நடந்தன.
கடந்த 10-ந் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் கோவில்களை திறக்க அரசு அனுமதி மறுத்துள்ளது. ஆனால் மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் கோவிலில் நேற்று ஒரு ஜோடிக்கு ஊரடங்கு உத்தரவை மீறி திருமணம் நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையிலான போலீசார் கோவில் நிர்வாகத்தினரை எச்சரித்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் நகரில் பல்வேறு இடங்களில் உள்ள சிறிய கோவில்களிலும் நேற்று அதிகாலை முதல் திருமண விழாக்கள் நடைபெற்றன. இதுகுறித்து நேற்று திருமணம் நடந்த மணமக்களின் உறவினர் ஒருவர் கூறுகையில், ‘திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த பிறகு நேற்று முன்தினம் இரவு திடீரென திருமண மண்டபங்களை காலி செய்ய அதிகாரிகள் வலியுறுத்தினர். அதேசமயம் அரசியல்வாதிகள், வசதிபடைத்தவர்கள் இல்ல திருமணங்கள் மட்டும் திருமண மண்டபங்களில் நேற்று நடந்துள்ளது. இதனை அதிகாரிகள் தடுக்கவில்லை. இது பாரபட்ச நடவடிக்கை ஆகும்’ என்றார்.
Related Tags :
Next Story