தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்


தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 19 May 2021 5:43 PM IST (Updated: 19 May 2021 5:43 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கியூ பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தீவிர கண்காணிப்பு
இலங்கை அரசு வெளிநாடுகளில் இருந்து மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதித்து உள்ளது. இதனால் அங்கு மஞ்சள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஒரு கிலோ மஞ்சள் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு அதிக அளவில் விரலி மஞ்சள் கடத்தப்பட்டு வருகிறது. சமீபகாலமாக தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள், கஞ்சா, பீடி இலை, கடல் அட்டை போன்றவை கடத்தல் அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர பகுதியில் உள்ள உள்ளூர் போலீசார், கியூ பிரிவு உள்ளிட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிரடி சோதனை
அதன்படி, தூத்துக்குடி முத்தரையர்காலனி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், வேலாயுதம், வில்லியம் பெஞ்சமின், ஏட்டு இருதய ராஜ்குமார் ஆகியோர் கடற்கரையில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, சிலர் கடற்கரையில் நின்ற ஒரு லோடு ஆட்டோவில் இருந்து சில மூட்டைகளை நாட்டுப்படகில் ஏற்றிக் கொண்டு இருந்தனர். அங்கு போலீசார் விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த உடன் நாட்டுப்படகில் இருந்தவர்கள், படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் தப்பி சென்று விட்டனர்.
மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்
இதைத்தொடர்ந்து கடற்கரையில் நின்ற லோடு ஆட்டோவில் போலீசார் சோதனை செய்தனர். அதில், தலா 30 கிலோ எடை கொண்ட 42 மூட்டைகள் இருந்தன. அவற்றில் 28 மூட்டைகளில் மொத்தம் 840 கிலோ விரலி மஞ்சள் இருந்தது. இதேபோன்று 14 மூட்டைகளில் மொத்தம் சுமார் 420 கிலோ பீடி இலைகள் இருந்தன. இலங்கையில் இவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
தொடர்ந்து போலீசார் விரலி மஞ்சள், பீடி இலை மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
ஆட்டோ டிரைவர் கைது
இது தொடர்பாக லோடு ஆட்டோ டிரைவர் உமர்அலி (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தாளமுத்துநகரை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான பொருட்கள் என்றும், இதனை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் பறிமுதல் செய்த பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட உமர்அலியை சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாதுகாப்பில் குறைபாடுகள் உள்ளதோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story