‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி தாம்பரம் காசநோய் ஆஸ்பத்திரியில் கொரோனா வகைப்படுத்துதல் மையம் மீண்டும் தொடக்கம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி தாம்பரம் காசநோய் ஆஸ்பத்திரியில் கொரோனா வகைப்படுத்துதல் மையம் மீண்டும் தொடக்கம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 7 May 2021 11:17 AM IST (Updated: 7 May 2021 11:17 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் காசநோய் ஆஸ்பத்திரியில் கொரோனா வகைப்படுத்துதல் மையம் இன்று முதல் மீண்டும் செயல்பட உள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

தாம்பரம், 

கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து விட்டதால் சென்னையை அடுத்த குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் குவிந்து வருகிறார்கள். அங்கேயே கொரோனா நோய் வகைப்படுத்துதல் மையமும் செயல்படுவதால் நீண்டவரிசையில் நோயாளிகள் காத்திருக்க வேண்டியது உள்ளது.

இதனால் அவசர சிகிச்சை, பிரசவம் உள்ளிட்ட மற்ற சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே கொரோனா முதல் அலையின்போது காசநோய் ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வந்த கொரோனா நோய் வகைப்படுத்துதல் மையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை தொடர்பான செய்தி கடந்த 30-ந் தேதி ‘தினத்தந்தி’ நாளிதழில் வெளியானது.

இந்தநிலையில் தாம்பரம் சானடோரியத்தில் உள்ள காசநோய் ஆஸ்பத்திரி, தாம்பரம் அரசு சித்த மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது கொரோனா நோய் வகைப்படுத்தும் மையம் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி என 2 இடங்களில் மட்டும் நடைபெற்று வருகிறது.

அதை மேலும் விரிவுபடுத்துவதற்காகவும், குரோம்பேட்டை ஆஸ்பத்திரி ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும் மீண்டும் காசநோய் ஆஸ்பத்திரியில் கொரோனா நோய் வகைப்படுத்துதல் மையம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் செயல்பட உள்ளது.

குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் கொரோனா நோயாளிகள் இங்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை செய்து அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்துவதா?, சிகிச்சை மையத்துக்கு அனுப்புவதா?, ஆஸ்பத்திரிக்கு அனுப்புவதா? என வகைப்படுத்தி அனுப்பி வைக்கப்படுவார்கள். பல்லாவரம் பகுதியில் கன்டோன்மென்ட் ஆஸ்பத்திரியை நோய் வகைப்படுத்தும் மையமாக இன்னும் ஓரிரு நாட்களில் மாற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் அரசு காசநோய் ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்ரீதர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் முஜிபூர் ரகுமான், மண்டல பொறியாளர் கருப்பையா ராஜா மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.

Next Story