குளச்சலில் மீனவர் வலையில் சிக்கிய சுறா மீன்கள்


குளச்சலில் மீனவர் வலையில்  சிக்கிய சுறா மீன்கள்
x
தினத்தந்தி 6 May 2021 11:35 PM IST (Updated: 6 May 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

குளச்சலில் விசைப்படகு மீனவர்கள் வலையில் ஏராளமான சுறா மீன்கள் சிக்கின. அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

குளச்சல், 
குளச்சலில் விசைப்படகு மீனவர்கள் வலையில் ஏராளமான சுறா மீன்கள் சிக்கின. அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.
விசைப்படகு மீனவர்கள்
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300 விசைப்படகுகளும், 1000- க்கும் மேற்பட்ட கட்டுமரங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. கட்டுமர மீனவர்கள் தினமும் அதிகாலையில் கடலுக்கு சென்றுவிட்டு மதியம் கரை திரும்புவார்கள். இவர்களது வலையில் சிறிய ரக மீன்கள் சிக்கி இருக்கும்.
விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று 10 நாட்கள் வரை தங்கியிருந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்புவார்கள். இவர்களது படகில் பல உயரக மீன்கள் சிக்கியிருக்கும். நேற்று கரை திரும்பிய 3 விசைப்படகுகளில் ஏராளமான சுறா மீன்கள் சிக்கியிருந்தன. அவை 30 கிலோ முதல் 100 கிலோ வரை எடை இருந்தது.
போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்
அந்த மீன்களை துறைமுக ஏலக்கூடத்திற்கு எடுத்து சென்று விற்பனை செய்தனர். அவற்றை வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் எடுத்தனர். 
இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறியதாவது:-
விசைப்படகு மீனவர்கள் வலையில் நேற்று மட்டும் சுமார் 5 டன் எடையில் சுறா மீன்கள் சிக்கியிருந்தன. இந்த மீனுக்கு கேரளா மற்றும் வெளிநாடுகளில் நல்ல மவுசு உள்ளது. பீலி சுறா எனப்படும் சுறாக்களுக்கு மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் அவை வெளிநாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நேற்று பிடிபட்ட மீன்கள் சாதாரண சுறா என்பதால் அவை உணவுக்காக மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது, என்றார். 

Next Story