குடிநீர், பாசனத்திற்காக அமராவதி அணையில் இருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு
குடிநீர், பாசனத்திற்காக அமராவதி அணையில் இருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
க.பரமத்தி
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 4047 மில்லியன் கன அடி ஆகும். இந்த அணையில் இருந்து வெளிவரும் தண்ணீர் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. இதனால் இந்த பகுதிகளில் நெல், கரும்பு, மஞ்சள், மக்காச்சோளம், வாழை போன்ற பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.
இதேபோல் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வருகிறது. கடந்த 6 மாதமாக அணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் மேலாக இருப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 553 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
தண்ணீர் திறப்பு
கடந்த ஒரு மாதமாக கரூர் மாவட்டத்தில் 100 டிகிரிக்கும் மேலாக வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பயிர்கள் காயும் நிலையில் உள்ளது. மேலும் அமராவதி ஆற்றின் நீர் நிலைகளில் தண்ணீர் சுத்தமாக வற்றி வருகிறது. இதனால் பொது மக்களுக்கும், கால்நடைகளுக்கும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கரூர் மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி கோரிக்கை விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து 21-ந் தேதி (நேற்று முன்தினம்) காலை 7 மணிக்கு அமராவதி அணையில் இருந்து ஆற்றிற்கு 1500 கனஅடி தண்ணீர் வீதம் 10 நாட்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது கரூருக்கு 25-ந் தேதி இரவுக்குள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகிழ்ச்சி
அணையின் நீர்மட்டம் நேற்று காலை 7 மணிக்கு 84.03 அடியாகும். அணைக்கு வினாடிக்கு 27 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றிற்கு 1500கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் தற்போது 3516.69 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. அமராவதி அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story