சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் திருவிழா


சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் திருவிழா
x
தினத்தந்தி 18 April 2021 10:50 PM IST (Updated: 18 April 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் நடைபெற்ற திருமுலைப்பால் திருவிழாவில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்றார்.

சீர்காழி:
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் நடைபெற்ற திருமுலைப்பால் திருவிழாவில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்றார்.
சட்டைநாதர் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், தேவார பாடல்களின் ஆசிரியர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த ஊராகவும், புராதன காலத்தில் பிரம்மபுரம், வேணுபுரம், தோணிபுரம், சிரபுரம் என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்பட்ட இந்த ஊரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. 
நான்கு புறமும் கோபுரங்களுடன் பிரம்மாண்டமாக காட்சி தரும் இந்த கோவிலில் பிரம்மபுரீஸ்வரர் திருநிலை நாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். இங்கு அஷ்ட பைரவர்களும் காட்சி தருவது சிறப்பு அம்சமாகும். 
இந்த கோவிலில் திருஞானசம்பந்தர் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முன்பு ஒருமுறை திருஞானசம்பந்தர் சிறுபிள்ளையாக இருந்தபொழுது பார்வதி தேவியான திருநிலைநாயகி அம்மை ஞானப்பால் வழங்கி அவருக்கு ஞானத்தை ஊட்டியதாக தல வரலாறு கூறுகிறது. 
திருமுலைப்பால் விழா
இந்த தல வரலாற்றை நினைவு கூரும் விதமாக திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருமுலைப்பால் விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு சட்டைநாதர் கோவிலில் நேற்று திருமுலைப்பால் விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு திருஞானசம்பந்தர் பிரம்மபுரீஸ்வரர் சன்னதியில் இருந்து புறப்பட்டு பிரம்ம தீர்த்தக்கரையில் எழுந்தருளினார். அங்கு திருஞானசம்பந்தருக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்த பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் பல்லக்கில் ஞானசம்பந்தர் புறப்பாடு நடந்தது. அப்போது மலைக்கோவிலில் இருந்து உமா மகேஸ்வரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எடுத்துவரப்பட்டு தீர்த்தக் குளக்கரையில் எழுந்தருளினார்.
இதனையடுத்து பகல் 12 மணி அளவில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் தங்க குடத்தில் உள்ள பால் கிண்ணத்தில் எடுத்து திருஞானசம்பந்தருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து சிவபெருமான்- உமாமகேஸ்வரி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருஞானசம்பந்தருக்கு காட்சி அளித்தனர். 
குறைவான பக்தர்கள் சாமி தரிசனம்
அப்போது சாமி-அம்மன் மற்றும் திருஞானசம்பந்தருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் குறைவான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
விழா ஏற்பாடுகளை கோவில் கணக்கர் செந்தில் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு யுவப்பிரியா தலைமையில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story