நீர்வரத்து சரிவு: பாறைகளாக காட்சி அளிக்கும் ஒகேனக்கல் காவிரி ஆறு
நீர்வரத்து சரிவடைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆறு பாறைகளாக காட்சி அளிக்கிறது.
பென்னாகரம்:
நீர்வரத்து சரிவடைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆறு பாறைகளாக காட்சி அளிக்கிறது.
ஒகேனக்கல்
கர்நாடக மாநிலம் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழக எல்லையான தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்குள் நுழைகிறது. கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும்.
இங்குள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதை காண தமிழகம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இவர்கள் தொங்கு பாலம், நடைபாதை, பார்வை கோபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசிப்பார்கள்.
நீர்வரத்து குறைந்தது
பின்னர் அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, காவிரி ஆற்றில் குளித்து மகிழ்வார்கள். மேலும் குடும்பத்தினர், நண்பர்களுடன் அவர்கள் பரிசலில் சென்று மகிழ்ந்து செல்வார்கள். கடந்த சில மாதங்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.
நீர்வரத்து குறைந்ததாலும், மழை பெய்யாததாலும் தற்போது ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 300 கனஅடிக்கு குறைவாகவே தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நீர்வரத்து சரிவடைந்துள்ளதால் கரைபுரண்டு ஓடிய ஒகேனக்கல் காவிரி ஆறு தற்போது வெறும் பாறைகளாக காட்சி அளிக்கிறது.
ஆர்ப்பரித்து கொட்டிய ஐந்தருவி, மெயின் அருவி களையிழந்து வறண்டு காணப்படுகிறது. காவிரி ஆற்று பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குட்டைபோல் காட்சி அளிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story