பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முருகன் தீவிர வாக்குசேகரிப்பு


பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முருகன் தீவிர வாக்குசேகரிப்பு
x
தினத்தந்தி 30 March 2021 11:37 AM (Updated: 30 March 2021 11:37 AM)
t-max-icont-min-icon

பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முருகன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

தேனி, 

தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக எம்.முருகன் போட்டியிடுகிறார். அவர் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும் வீதி, வீதியாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் முருகன் நேற்று காலையில் தென்கரை பேரூராட்சி பகுதியில் மகளிர் சுயஉதவிக்குழுவினரை சந்தித்து ஆதரவு திரட்டினார். அ.தி.மு.க. அரசு பெண்களுக்கும், மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கும் செய்த நலத்திட்டங்கள் மற்றும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் சிறப்புகளை எடுத்துக் கூறி வாக்குசேகரித்தார்.

இதையடுத்து நேற்று மாலை வடுகபட்டி, தாமரைக்குளம், பங்களாபட்டி, காந்திநகர், அழகர்நாயக்கன்பட்டி, நாகம்பட்டி, நாகம்பட்டி காலனி, தர்மலிங்காபுரம் ஆகிய ஊர்களில் அ.தி.மு.க. வேட்பாளர் முருகன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு கடந்த 10 ஆண்டுகளில் எண்ணற்ற நலத்திட்டங்களை ஏழை, எளிய மக்களுக்காக நிறைவேற்றி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

தமிழக மக்களின் பேராதரவுடன் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் விலையில்லா வாஷிங் மெஷின் வழங்கப்படும். அம்மா குலவிளக்கு திட்டத்தின் கீழ் இல்லதரசிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும். ஒவ்வொரு பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தனிக்கவனம் செலுத்துவேன். பெரியகுளம் சட்டமன்ற தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றிட பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரசாரத்தில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story