திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தெப்ப உற்சவம்; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் நேற்று தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
தாயுமான சுவாமி கோவில்
தென்கயிலாயம் என்று போற்றப்படும் மிகவும் பழமை வாய்ந்த திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக, மேற்கு பார்த்த நிலையில் மிகப் பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். சிவபக்தியில் சிறந்த ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு அவளது பேறுகாலத்தில் அவளது, தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.
இந்த கோவிலில் உள்ள தாயுமான சுவாமிக்கு மலைக்கோட்டை மேற்கு பகுதியில் கரிகால் சோழனால் கட்டப்பட்ட பிரம்ம தீர்த்தம் என்ற (சோம ரோகணி) தெப்பகுளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தின் நடுவில் அழகிய நீராழி மண்டபம் விஸ்வநாத நாயக்கரால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தெப்பக்குளத்தில் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமான சுவாமிக்கு தெப்பத்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு (பங்குனி உத்திரம்) முந்தைய நாள் நடைபெறுவது வழக்கம்.
தெப்பத்திருவிழா
கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் இந்த தெப்பத்திருவிழா நடைபெற வில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டு தெப்பத்திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. இதற்காக நேற்று மதியம் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாலை 6.25 மணிக்கு சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மலைக்கோட்டை உள்வீதி, சின்னக்கடை வீதி என்.எஸ்.பி.ரோடு வழியாக தெப்பக்குளத்தை வந்தடைந்தனர்.
தெப்ப உற்சவம்
பின்னர், தெப்பக்குளத்தில் தயார் நிலையில் இருந்த அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இரவு 7.50 மணிக்கு எழுந்தருளினர். பின்னர் தெப்பக்குளத்தின் நடுபகுதியில் உள்ள நீராழி மண்டபத்தில் சுவாமி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த தெப்பத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர் இரவு 11 மணிக்கு மேல் தெப்பத்தில் இருந்து சுவாமி அம்பாள் வெளியே வந்தனர். அதைத்தொடர்ந்து நந்தி கோயில் தெரு, ஆண்டாள் வீதி, சறுக்குப் பாறை வழியாக இரவு 12 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் மீண்டும் கோவிலை சென்றடைந்தனர். தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில் அதே தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியுடன் தெப்பத்திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
பாதுகாப்பு
இந்த தெப்பத் திருவிழாவை முன்னிட்டு மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின் பேரில் போலீஸ் துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி மேற்பார்வையில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தெப்பத் திருவிழாவை யொட்டி தெப்ப குளத்தை சுற்றி உள்ள நான்கு வீதிகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. மேலும் பக்தர்களின் வசதிக்காக தெப்ப குளத்தை சுற்றியும் போடப்பட்டிருந்த அனைத்துத் தரைக்கடைகளும் நேற்று முன்தினமே அகற்றப்பட்டன.
Related Tags :
Next Story