ராஜகோபாலசாமி கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம்


ராஜகோபாலசாமி கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 20 March 2021 5:34 PM (Updated: 20 March 2021 5:34 PM)
t-max-icont-min-icon

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மன்னார்குடி;
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 
ராஜகோபாலசாமி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக மன்னார்குடி ராஜகோபால சாமி கோவிலில் பங்குனி திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ராஜகோபாலசாமி பல்வேறு வாகனங்களில் வீதிஉலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 
தேரோட்டம்
 நேற்றுமுன்தினம் பிரசித்தி பெற்ற வெண்ணெய்தாழி உற்சவம் நடைபெற்றது.  இதனையொட்டி நவநீதசேவையில் பல்லக்கில் வீதி உலா சென்ற ராஜகோபாலசாமி மீது பக்தர்கள் வெண்ணெய் வீசி வழிபட்டனர். இரவு தங்க குதிரை வாகனத்தில் ராஜகோபாலசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக தேருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் ராஜகோபால சாமி  எழுந்தருளினார். 
பாதுகாப்பு பணி
தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து  இழுத்தனர். தேர் கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளையும் வலம் வந்து பின்னர் நிலையை அடைந்தது. அப்போது வீதி முழுவதும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரில் வலம் வந்த ராஜகோபாலசாமியை வழிபட்டனர். தேர் மாலை 6 மணி அளவில் நிலையை  அடைந்தது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மன்னார்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story