தமிழ் பெயர்களுடன் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு


தமிழ் பெயர்களுடன் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு
x
தினத்தந்தி 13 March 2021 1:56 AM IST (Updated: 13 March 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் பெயர்களுடன் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

பேரையூர்
டி.கல்லுப்பட்டி அருகே தமிழ் பெயர்கள் உள்ள பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
கல்வெட்டு
மதுரை டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கோபாலபுரத்தில் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவி பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமையில் வரலாற்று குழுவினர் கள ஆய்வு செய்தனர். அப்போது பாதி புதைந்த நிலையில் கல்வெட்டுடன் உள்ள ஒரு மாலை கோவில் வயல் வெளியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இது 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என தெரிகிறது.
இதுகுறித்து முனீஸ்வரன் கூறியதாவது, சங்ககாலம் முதல் தமிழர் பண்பாட்டின் நடுகல் வழிபாடு ஒரு முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது. குறிப்பாக மன்னர்களுக்கு இடையே ஏற்பட்ட போர், பூசல் காரணமாக இறந்த வீரர்களுக்கு நடுகற்கள் நட்டு வழிபடும் முறை இருந்துள்ளது. அதேபோன்று போரிலோ, வேறு காரணங்களாலோ கணவன் இறந்தபின் அவனுடனே அல்லது தனியாகவோ உடன்கட்டை ஏறி இறந்த மனைவிக்கு அமைக்கப்பட்ட சதிக்கற்களை மாலை கோவில்கள் என மதுரை, ராமநாதபுரம், தேனி, உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் வணங்கி வருகிறார்கள். 
தமிழ் பெயர்கள்
சதிக்கல்லில் கணவனுடன் மனைவியும் இருப்பது போன்றோ, தனியாக பெண் மட்டும் இருப்பது போன்றோ சிற்பம் அமைக்கப்பட்டிருக்கும். இப்பெண் சுமங்கலியாக இறந்தவள் என்பதை காட்ட கையை உயர்த்தி அதில் வளையல் உள்ளிட்ட அணிகலன்கள் அணிந்தவளாகவும் காணப்படுவாள். பெண்ணின் உருவம் ஆணின் உருவத்தை விட சிறியதாகவோ அல்லது கைகள் மட்டுமோ இருக்கும் அமைப்புகள் சில சிற்பங்களில் காணப்படுகிறது. இத்தகைய சதிக்கல்லை குடும்பத்தினருடன் ஊராரும் வழிபடுவது வழக்கம். கோபாலபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சதிக்கல் கல்வெட்டு இரண்டரை அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும், உள்ளது. இதில் ஆண் மற்றும் பெண்ணின் தலையில் உள்ள கொண்டை சற்று சரிந்துள்ளது. ஆணின் வலது கையில் உள்ள வாள் கீழ் நோக்கி உள்ளது. அணிகலன்களுடன் காலை மடக்கி தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் ஆணும், வலது கையை உயர்த்தி பெண்ணும் காணப்படுகின்றனர். இது மாலை கோவில் என்ற பெயரில் தற்போதும் மக்கள் வழிபாட்டில் உள்ளது. இதன்மேல் "புகள் கொட்ட நாமகன் சிவை மாலை" என 3 வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
சிற்பத்தில் உள்ள ஆண் நாமகன் என்றும், பெண் சிவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தூய தமிழில் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. தென் தமிழ்நாட்டில் சாதி என்ற சொல்லுக்கு மாற்றாக மாலை என்ற தூய தமிழ்ச்சொல்லே கல்வெட்டுகளிலும் மக்கள் பயன்பாட்டிலும் இருப்பதை அறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story