ஈரோடு மேற்கு தொகுதி- கண்ணோட்டம்


ஈரோடு மேற்கு தொகுதி- கண்ணோட்டம்
x
தினத்தந்தி 5 March 2021 3:01 AM IST (Updated: 5 March 2021 3:01 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மேற்கு சட்டசபை தொகுதி கண்ணோட்டம்.

ஈரோடு மாவட்டத்தின் தலைநகரில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று ஈரோடு மேற்கு. சட்டசபை தொகுதிகள் வரிசையில் 99-வதாக இடம் பெற்று இருக்கிறது.
ஈரோடு மாநகரப்பகுதிகளும், சுற்றி உள்ள கிராமப்பகுதிகளும் இணைந்த தொகுதி. மிக அதிக வளர்ச்சி தேவை உள்ள தொகுதியாகவும் இருக்கிறது. ஈரோடு மேற்கு தொகுதியின் வளர்ச்சி, ஈரோடு மாநகரின் வளர்ச்சியாக மாறும் காலம் விரைவில் வரும். அந்த அளவுக்கு மாநகராட்சியில் அதிக பரப்பளவை தன்னுள் கொண்டு இருக்கிறது.
பவானி, பெருந்துறை, மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு என்று 4 சட்டமன்ற தொகுதிகளை எல்லையாக கொண்டு இருக்கிறது. ஈரோடு ஒன்றியம், சென்னிமலை ஒன்றியத்தின் ஒரு பகுதியும் ஈரோடு மேற்கு தொகுதியில் உள்ளன. ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு உள்ள பழைய சூரியம்பாளையம் பேரூராட்சி, பெரியசேமூர் நகராட்சி, சூரம்பட்டி நகராட்சி, காசிபாளையம் நகராட்சி, திண்டல் ஊராட்சி, வில்லரசம்பட்டி ஊராட்சி, கங்காபுரம் ஊராட்சி ஆகியவற்றுடன் தற்போது ஒன்றியத்தில் உள்ள மேட்டுநாசுவம்பாளையம், எலவமலை, கூரப்பாளையம், கதிரம்பட்டி, பிச்சாண்டம்பாளையம், பேரோடு ஆகிய 6 ஊராட்சிகள். நசியனூர் பேரூராட்சி, சித்தோடு பேரூராட்சி, சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட குமாரவலசு, கவுண்டச்சிபாளையம், வடமுகம் வெள்ளோடு, புங்கம்பாடி, தென்முகம் வெள்ளோடு, முகாசி புலவன்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் ஈரோடு மேற்கு தொகுதியில் உள்ளன.
ஈரோடு பஸ் நிலையம் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருக்கிறது என்றால், ஈரோடு ரெயில் நிலையம் ஈரோடு மேற்கு தொகுதியில் உள்ளது. இதுதவிர ஈரோடு மேற்கு தொகுதியில் சேலம்-கோவை 4 வழிச்சாலை, ஈரோடு ரிங் ரோடு என்று ஈரோடு மாநகரத்துக்கான நுழைவு வாயில் பகுதிகள் அமைந்து இருக்கின்றன.
ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி 2008-ம் ஆண்டு தொகுதிகள் மறுசீரமைப்பின்போது புதிதாக உருவாக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்தது. அப்போது அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் காங்கிரஸ் வேட்பாளர் எம்.யுவராஜைவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். அவர் ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்றதன் மூலம் ஈரோடு மேற்கு தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றது.
கடந்த 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலிலும், இந்த தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிட்டது. முதலில் சித்தோடு வரதராஜ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், திடீரென்று மீண்டும் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் வேட்பாளரானார். இந்த தேர்தலில் கடுமையான போட்டியின் மத்தியிலும் தி.மு.க. வேட்பாளர் சு.முத்துசாமியை விட அதிக வாக்குகள் பெற்று கே.வி.ராமலிங்கம் தொகுதியை தக்க வைத்துக்கொண்டார்.
ஈரோடு மேற்கு தொகுதியின் 2 தேர்தல்களிலும் கே.வி.ராமலிங்கம் மட்டுமே எம்.எல்.ஏ. என்று பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
ஈரோடு மேற்கு தொகுதியை பொறுத்தவரை நகரமும், கிராமமும் சரிசமமாக உள்ள தொகுதி. விவசாயம், தொழில், நெசவு என்று அனைத்து வகை தொழில்களும் உள்ளன.
இந்த தொழில்களின் வளர்ச்சிக்காக ஈரோடு மேற்கு தொகுதியில் என்ன செய்யப்பட்டு இருக்கிறது என்பது கேள்விக்கு உரியது.
அதே நேரம் சட்டமன்ற உறுப்பினர் பல சமூக அமைப்புகளை உற்சாகப்படுத்தி இதுபோன்ற பணியை மேற்கொள்ளவும் வைத்து உள்ளார். இதன் மூலம் பெரும்பள்ளம் ஓடை, சூரம்பட்டி வலசு அணைக்கட்டு ஆகியவை பல முறை தூர் வாரப்பட்டு உள்ளன. கொல்லம்பாளையம் ஓடை சுத்தம் செய்யும் பணியும் நடந்து உள்ளது.
இந்த தேர்தல் எதிர்பார்ப்புடன் அமையும் தேர்தலாகும். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரைக்காக வந்த போது இரவு நேரத்திலும் ஈரோடு மேற்கு தொகுதியில் மக்கள் காத்திருந்து அவருக்கு வரவேற்பு அளித்தனர். 
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்த தேர்ந்து எடுத்த தொகுதியாகவும் ஈரோடு மேற்கு இருந்தது. எனவே நட்சத்திர தொகுதியாகவே இது இன்னும் களத்தில் உள்ளது.
ஈரோடு மேற்கு தொகுதியின் தற்போதைய மொத்த வாக்காளர்கள்1 லட்சத்து 91 ஆயிரத்து 316 பேர்.
ஈரோடு மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி இது. அதிக மக்களால் தேர்ந்து எடுக்கப்பட உள்ள சட்டமன்ற உறுப்பினர் யார்? அவரை மக்கள் எந்த அடிப்படையில் தேர்ந்து எடுக்கப்போகிறார்கள்? என்பதும் எதிர்பார்ப்பு.
கொங்கு வேளாள கவுண்டர்கள், முதலியார் சமூகத்தினர், நாடார் சமூகத்தினர், ஆதிதிராவிட மக்கள், பிற சமூகத்தினர் கலந்து வாழும் தொகுதி. நகரம் பாதி, கிராமம் மீதி என்ற கலவையுடன் திகழும் ஈரோடு மேற்கு தொகுதியின் வளர்ச்சி ஒட்டு மொத்த ஈரோட்டின் வளர்ச்சி என்பது மட்டும் உண்மை.


Next Story