நடிகர் வடிவேலு சினிமா பாணியில் குடும்பத்தினரை பார்க்க செல்வதாக கூறி போலீசாரிடம் இருந்து தப்பிய கைதி மீண்டும் பிடிபட்டார்


நடிகர் வடிவேலு சினிமா பாணியில் குடும்பத்தினரை பார்க்க செல்வதாக கூறி போலீசாரிடம் இருந்து தப்பிய கைதி மீண்டும் பிடிபட்டார்
x
தினத்தந்தி 20 Dec 2020 7:44 AM IST (Updated: 20 Dec 2020 7:44 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் வடிவேலு சினிமா பாணியில் குடும்பத்தினரை பார்க்க செல்வதாக கூறி போலீசாரிடம் இருந்து தப்பிய கைதி மீண்டும் பிடிபட்டார்.

மன்னார்குடி, 

நடிகர்கள் அர்ஜூன் மற்றும் வடிவேலு ஆகியோர் ஒரு சினிமாவில் போலீஸ்காரர்களாக நடித்து இருப்பார்கள். அந்த படத்தில் கைதி ஒருவர் தனது தாயை பாா்க்க வேண்டும் என கெஞ்சுவார்.

அதற்கு அர்ஜூன் மறுப்பு தெரிவித்த பின்னரும், கைதியின் தாய்ப்பாசத்துக்கு மனமிரங்கிய வடிவேலு அந்த கைதியை அவருடைய வீட்டுக்கு அழைத்து செல்வார். ஆனால் அந்த கைதி வடிவேலு மற்றும் அர்ஜூனை ஏமாற்றி விட்டு தப்பி சென்று விடுவார்.

இந்த நகைச்சுவை காட்சியின் பாணியில் மன்னார்குடி அருகே ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

மோட்டார் சைக்கிள் திருட்டு

தஞ்சை மாவட்டம் கன்னியாகுறிச்சி பாவாஜிகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் அப்பு(வயது 19). இவர் மீது பரவாக்கோட்டை, மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் மோட்டார் சைக்கிள் திருடியதாக வழக்குகள் உள்ளன.

இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட அப்பு நாகை கிளை சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் முடிந்ததும் அவரை மீண்டும் ேகார்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக பரவாக்கோட்டை போலீஸ் ஏட்டு ராமலிங்கம், போலீஸ்காரர் வினோத் ஆகிய இருவரும் நாகையில் உள்ள கிளை சிறையில் இருந்து மன்னார்குடி கோர்ட்டுக்கு நேற்று முன்தினம் காரில் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர்.

மனமிரங்கிய போலீசார்

அப்போது அப்புவை மீண்டும் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அவரை மீண்டும் நாகை கிளை சிறைக்கு அழைத்து செல்வதற்காக போலீசார் காரில் ஏற்றினர்.

அப்போது அப்பு தனது குடும்பத்தினரை பார்க்கனும்போல இருக்கு என போலீசாரிடம் அழுவதுபோல் கூறினார். இதனால் மனமிரங்கிய போலீசார், அப்புவை அவரது சொந்த ஊரான பாவாஜிகோட்டைக்கு காரில் அழைத்து சென்றனர்.

வாசலில் போலீசாரை நிற்க வைத்தார்

அங்கு வீட்டு வாசலில் போலீசார் இருவரையும் நிற்க வைத்து விட்டு அப்பு தனது வீட்டுக்குள் சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அவர் வீட்டின் பின்பகுதி வழியாக தப்பி சென்றது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இதுகுறித்து தங்களுடைய உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

மீண்டும் பிடிபட்டார்

இதைத்தொடர்ந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியில் அப்புவை தேடும் பணி தீவிரமாக நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் பதுங்கி இருந்த அப்பு போலீசாரிடம் பிடிபட்டார்.

இதுதொடர்பாக அவர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்த பரவாக்கோட்டை போலீசார் அவரை நாகை சிறையில் அடைத்தனர்.

போலீசை வாசலில் நிற்க வைத்து விட்டு கைதி தப்பி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story