ஊட்டி மைதானத்தில் புனே விளையாட்டு வீரர்கள் 12 பேர் பயிற்சி
ஊட்டி மைதானத்தில் புனேயை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் 12 பேர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டி,
கொரோனா காரணமாக ஊட்டியில் உள்ள எச்.ஏ.டி.பி. திறந்தவெளி விளையாட்டு மைதானம் மூடப்பட்டது. பின்னர் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதால், கடந்த அக்டோபர் மாதம் முதல் இங்கு வீரர்-வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் அங்கு தினமும் காலை மற்றும் மாலையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க அவர்கள் அனைவருமே சமூக இடைவெளி விட்டு முககவசம் அணிந்து பங்கேற்று வருகிறார்கள். மேலும் இங்கு அமைக்கப்பட்டு உள்ள சிந்தடிக் ஓடுதளத்தில் பயிற்சி மேற்கொள்வது எளிமையாக உள்ளது.
இந்த மைதானத்தில் வெளிமாநிலங்களை சேர்ந்த வீரர்கள் மலை மேலிட பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் ஊரடங்கு காரணமாக இந்த பயிற்சி மேற்கொள்ள யாரும் வரவில்லை. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் புனேவில் இருந்து ராணுவ ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த 12 வீரர்கள் மலை மேலிட பயிற்சிக்காக ஊட்டிக்கு வந்து உள்ளனர்.
அவர்கள் ஊட்டி எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானத்தில் தடகள பயிற்சி மற்றும் மலைப்பாதையில் நடைபயிற்சி, மாரத்தான் போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரும் உள்ளார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ஜெயச்சந்திரன் கூறியதாவது:-
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள நடைபெறும் தகுதி சுற்று போட்டியில் பங்கேற்க பயிற்சி பெறுவதற்காக புனேவில் இருந்து 12 வீரர்கள் ஊட்டி வந்து பயிற்சி செய்து வருகிறார்கள். அவர்கள் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தயாராகி வருகின்றனர். மலைப்பிரதேசமான ஊட்டியில் பயிற்சி மேற்கொண்டால் சமவெளி பகுதிகளில் நடக்கும் போட்டிகளில் வேகமாக ஓட முடியும்.
இதற்கு குறைந்த அளவு ஆக்ஸிஜன் உள்ள இடங்களில் பயிற்சி மேற்கொள்வதால், போட்டியின் போது ஆக்சிஜன் அதிகமாக கிடைப்பதால் அதிக திறனை பெறலாம். அவர்கள் வருகிற மார்ச் மாதம் வரை பயிற்சி செய்கின்றனர். அதேபோல் சென்னையில் இருந்து 16 பேர் ஊட்டிக்கு வந்து மலை மேலிட பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story