திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த என்ஜினீயர் கைது


திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 11 Dec 2020 12:06 PM IST (Updated: 11 Dec 2020 12:06 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூரைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவரின் செல்போனில் நேற்று முன்தினம் இரவு அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பை ஏற்று டிரைவர் பேசினார். அப்போது எதிர்முனையில் பேசியவர் திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே இருப்பதாகவும், தனது கையை அறுத்து கொண்டதாகவும், உடனடியாக தன்னை வந்து காப்பாற்றும்படியும் கூறினார். மேலும் திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு வைத்து விட்டதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் அந்த ஆசாமி கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆம்புலன்ஸ் டிரைவர் உடனடியாக திருப்பூர் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் மாநகர போலீசார் உஷார் ஆனார்கள். உடனே போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணியிலிருந்து சோதனை நடத்தினார்கள்.

போலீசார் விசாரணை

பின்னர் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வந்து அங்குலம் அங்குலமாக ரெயில் நிலையம் முழுவதும் சோதனையிட்டனர். ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளின் உடைமைகள் மற்றும் சரக்கு மூட்டைகள் ஆகியவற்றையும் சோதனையிட்டனர். நள்ளிரவு 1 மணிக்கு மேலும் இந்த சோதனை நீடித்தது. ஆனால் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. அதன் பிறகு அது புரளி என்பது தெரியவந்தது.

இது ஒருபுறமிருக்க ஆம்புலன்ஸ் டிரைவரை தொடர்பு கொண்டு பேசிய வாலிபரின் செல்போன் எண்ணை தெற்கு போலீசார் வைத்து துப்பு துலக்கினர். அப்போது அந்த ஆசாமி திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் ஒரு அறையில் இருந்து பேசியது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த லாட்ஜுக்கு சென்று அந்த ஆசாமியை பிடித்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது

என்ஜினீயர் கைது

பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் தேனி மாவட்டம் வருசநாடு மயிலாடும்பாறை சேர்ந்த ஆனந்த் (வயது 29) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் ஆனந்த் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு தாராபுரம் வந்து அங்கு உள்ள பார் ஒன்றில் வேலை செய்துள்ளார். நேற்று முன்தினம் திருப்பூர் வந்த ஆனந்த் லாட்ஜில் அறை எடுத்து தங்கி மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறி தனது செல்போனில் இருந்து 108-க்கு தொடர்பு கொண்டு திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story