ரஜினிகாந்த் கட்சியால் தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை; ராஜ கண்ணப்பன் பேட்டி
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தி.மு.க. தேர்தல் பணிக்குழு இணை செயலாளர் ராஜகண்ணப்பன் கூறினார்.
பாதிப்பு இல்லை
வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் முதல்- அமைச்சராக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என்றும், நல்லாட்சி தருவதற்கு அவர் தேவை என்பதை வலியுறுத்தி விடியலை நோக்கி, ஸ்டாலினின் குரல் என்ற பயணம் நடந்து வருகிறது.
மத்திய அரசுக்கு அடிமையாக உள்ள ஆட்சியை ஒழித்து, நல்லாட்சியை தமிழ்நாட்டில் தொடருவதற்கு இந்த பயணம் உறுதுணையாக இருக்கும்.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது அவரது சொந்த விருப்பம். அவர் ஆரம்பிக்கட்டும். அதன்பிறகு என்ன சொல்லுகிறார்? என்று பார்ப்போம். இதில் மத்திய அரசு தலையீடு உள்ளதா? என்பதும், யார் யார் அவரது கட்சியில் சேருகிறார்கள்? என்பதும் விரைவில் தெரியும். அவர் கட்சி ஆரம்பித்தால் தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வருவதற்கு எந்த தடையும் இல்லை. இதில் வேறு எந்தப் பாதிப்பும் தி.மு.க.வுக்கு இல்லை.
பழிவாங்கும் முயற்சி
பா.ஜனதா கட்சி சார்பில் வேல் யாத்திரை நடக்கிறது. அது அந்த கட்சியினர் நடத்துவது. அதேசமயம், அமலாக்கத் துறை நடவடிக்கை மூலம் பலரை பா.ஜனதாவிற்கு இழுத்து வருகின்றனர். எங்களுக்கு மடியில் கனமில்லை. அதனால் பயமில்லை. அதனால் நாங்கள் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை.
தமிழகத்தில் பெய்த கன மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் தமிழக அரசு முறையாக செய்யவில்லை. மக்கள் மிகவும் துன்பத்தில் இருக்கிறார்கள். கஜா புயலின் போது சொன்னதை எதையும் செய்யவில்லை. கடந்த 10 வருடம் அ.தி.மு.க ஆட்சியில் இருந்து எதுவும் செய்யவில்லை. எந்த நடவடிக்கையும் சரியாக இல்லை. மழைநீரை அகற்ற சரியான நடவடிக்கை இல்லை. உதயநிதி ஸ்டாலினை பிரசாரத்தின் போது கைது செய்வதால், அவருக்கு புகழ்தான் சேர்ந்து உள்ளது. இது அரசியல் பழிவாங்கும் முயற்சி.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.எ. உடன் இருந்தார்.
Related Tags :
Next Story