தீபாவளி பண்டிகையையொட்டி கடலூரில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்


தீபாவளி பண்டிகையையொட்டி கடலூரில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 13 Nov 2020 12:00 PM IST (Updated: 13 Nov 2020 11:48 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி கடலூரில் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.

கடலூர்,

தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என எந்த பண்டிகை என்றாலும் புத்தாடைகள் வாங்க கடலூர் மாவட்ட மக்கள் ஒன்று கூடும் இடம் கடலூர் லாரன்ஸ் சாலை, இம்பீரியல் சாலை தான். அதுவும் தீபாவளி, பொங்கல் என்றால் கடலூர் நகரில் எங்கு பார்த்தாலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். போக்குவரத்து நெரிசலால் நகரமே ஸ்தம்பித்து போய்விடும்.

அந்த 2 இடங்களிலும் மக்கள் தலைகள் மட்டுமே தெரியும். பூமியை பார்ப்பது என்பது நள்ளிரவு நேரங்களில் மட்டுமே சாத்தியமாகும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கடந்த காலங்களில் தீபாவளி பண்டிகை என்றால் குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்பு பட்டாசு கடைகள், சுவீட் ஸ்டால், துணிக்கடைகள் போன்றவற்றுக்கு மக்கள் செல்ல தொடங்குவார்கள்.

அதனை தொடர்ந்து பண்டிகை நாள் நெருங்க, நெருங்க அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து பட்டாசு, துணிகள் வாங்கிச்செல்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பொருட்கள் வாங்க கடலூருக்கு படையெடுத்து வந்தனர்.

இதனால் கடைவீதிகளில் திரும்பிய பக்கமெல்லாம் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கொரோனா அச்சுறுத்தலை மறந்து பொதுமக்கள் ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகளில் குவிய தொடங்கினர். பின்னர் அவர்கள் புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் வீட்டில் பலகாரம் செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

இதன் காரணமாக கடலூர் லாரன்ஸ் சாலை, இம்பீரியல் சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கோபுரத்தில் இருந்தபடி போலீசார் கண்காணித்தனர்.

Next Story