பங்களாப்புதூர் அருகே ஆற்றில் மூழ்கி சிறுவன் சாவு நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்


பங்களாப்புதூர் அருகே ஆற்றில் மூழ்கி சிறுவன் சாவு நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 30 Sept 2020 10:12 PM IST (Updated: 30 Sept 2020 10:12 PM IST)
t-max-icont-min-icon

பங்களாப்புதூர் அருகே நண்பர்களுடன் குளித்தபோது ஆற்றில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

டி.என்.பாளையம்,

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் இலங்கை அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். அவருடைய மகன் தனுசுராஜ் (வயது 17). இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்கள் 6 பேருடன் ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகே உள்ள நஞ்சைபுளியம்பட்டி பவானி ஆற்றுக்கு சென்றார். பின்னர் அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்தனர்.

இதில் தனுசுராஜ் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. மேலும் அவருக்கு நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து நண்பர்கள் அனைவரும் குளித்துவிட்டு கரைக்கு திரும்பினர். ஆனால் தனுசுராஜ் வரவில்லை. இதனால் பதற்றத்துடன் திரும்பிப்பார்த்தனர். தனுசுராஜ் ஆற்றில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இதன்காரணமாக அதிர்ச்சி அடைந்த அவர்கள் அவரை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

உடல் மீட்பு

இதையொட்டி அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி கோபி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குச்சென்று தனுசு ராஜ் உடலை தேடிப்பார்த்தனர்.

பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது. அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தனுசுராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுவன் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story