அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று அமைச்சர்கள், அதிகாரிகள் கலக்கம்


அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று அமைச்சர்கள், அதிகாரிகள் கலக்கம்
x
தினத்தந்தி 6 Aug 2020 1:54 AM IST (Updated: 6 Aug 2020 1:54 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமைச்சர்கள், அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

புதுச்சேரி,

புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி. உப்பளம் அம்பேத்கர் சாலையில் இவரது வீடு உள்ளது. இங்கு வேலைபார்த்து வந்த பெண் ஒருவருக்கு கடந்த வாரம் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர் கந்தசாமியின் குடும்பத்தினர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

இந்தநிலையில் கந்தசாமியின் தாயார் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையொட்டி அமைச்சர் கந்தசாமியின் குடும்பத்தினர் அனைவரையும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதன்படி அவர்கள் கோரிமேட்டில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நேற்று அதிவிரைவு பரிசோதனை மேற்கொண்டனர்.

கொரோனா உறுதி

இதன் முடிவில் அமைச்சர் கந்தசாமி, அவரது மகனும் இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான விக்னேஷ் ஆகியோருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக அமைச்சர் அலுவலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

புதுவை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜே. ஜெயபால் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று மாலை தான் வீடு திரும்பினார். இதற்கிடையே கடந்த வாரம் திங்கட்கிழமை சட்டசபை வளாகத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முகாமில் அமைச்சர் கந்தசாமி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை.

அமைச்சர்கள் கலக்கம்

தற்போது மீண்டும் பரிசோதனை செய்ததில் அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் சட்டசபை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அமைச்சரின் அலுவலகத்தையும் ஒரு சில நாட்கள் மூட திட்டமிடப்பட்டு உள்ளது.

கடந்த 31-ந் தேதி தலைமை செயலகத்தில் நடந்த அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டார். இதனால் மற்ற அமைச்சர்கள், அதிகாரிகள் கலக்கத்தில் இருந்து வருகிறார்கள்.

Next Story