ஊரடங்கு தளர்வுக்கு பிறகும் முடங்கிய கூடை பின்னும் தொழில்
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகும், கூடை பின்னும் தொழில் முடங்கிய நிலையில் உள்ளது.
நெல்லை,
கொரோனா வைரஸ் பரவல் மனிதர்களை பாடாய்படுத்துவதோடு, அவர்களது தொழிலையும் பெரும்பாலும் முடக்கிப் போட்டு விட்டது. சிறிய கைத்தொழில் முதல் பெரிய தொழிற்சாலைகள் வரையிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் மூங்கில் கூடை பின்னும் தொழிலும் முடங்கிப்போய் உள்ளது.
நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை சமாதானபுரம் வாட்டர் டேங்க் அருகே சாலையோரத்தில் ஒரு குடும்பத்தினர் 3 தலைமுறைகளாக மூங்கில் கூடை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் மூங்கில் மூலம் பூக்கூடை, பாய், கூடை, கோழிக்கூண்டு, திரைகள், ஜன்னல் மறைப்புகள் போன்றவற்றை தயாரித்து விற்கின்றனர்.
வருமானமின்றி தவிப்பு
மேலும் மூங்கிலில் வெட்டிவேர் வைத்து பின்னல் செய்து, மருத்துவ குணமுடைய வெட்டிவேர் தட்டியும் தயார் செய்கிறார்கள். மேலும் வீட்டில் துணிகளை போட்டு வைக்கவும், வீட்டு உபயோகத்துக்கும் வித விதமான கூடைகளை தயார் செய்கிறார்கள். அதில் பல வடிவங்களையும், வண்ணங்களையும் சேர்த்து கலை நயத்துடனும் உருவாக்குகிறார்கள். மேலும் கோவில் சப்பரங்களில் அலங்காரத்துக்கு தேவையானவற்றை வெட்டிவேருடன் சேர்த்து உருவாக்கி கொடுத்து வருகிறார்கள்.
ஆனால் கொரோனா ஊரடங்கு இவர்களது தொழிலையும் முடக்கிப்போட்டு விட்டது என்றே கூறலாம். கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகும், இவர்களுக்கு ஆர்டர்கள் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை. இதனால் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் போதிய வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மூங்கில் கூடை பின்னல் தொழிலில் ஈடுபட்டுள்ள முருகேசன் மனைவி மாரியம்மாள் மற்றும் அவருடைய மகன்கள் மாரியப்பன், பேச்சிமுத்து ஆகியோர் கூறியதாவது:-
இருவகை மூங்கில்கள்
3 தலைமுறைகளாக மூங்கில் கூடை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கு குழல் மூங்கில் மற்றும் கல் மூங்கில் என 2 வகையான மூங்கில் கழிகளும் பயன்படுத்தப்படுகிறது. இதில் சிறிய அளவிலான குழல் மூங்கில்கள்தான் அதிகஅளவு பயன்படுத்துகிறோம்.
ஒருசில பொருட்களுக்கு மட்டும் கல் மூங்கில்களை கொண்டு தயார் செய்து கொடுக்கிறோம். மூங்கில்களை செங்கோட்டை மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து வாங்கி வருகிறோம். இதனை கொண்டு பொதுமக்கள் விரும்பி கேட்கும் கூடை, பாய், திரை வகைகளை தயார் செய்து கொடுக்கிறோம்.
கொரோனா ஊரடங்கால், நாங்கள் சாலையோரத்தில் கூடை பின்னும் தொழிலை செய்ய முடியவில்லை. தற்போது ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டாலும், பொதுமக்கள் முன்பு போல் விரும்பி வந்து எங்களிடம் பொருட்களை வாங்குவதும் இல்லை, ஆர்டர் கொடுப்பதும் இல்லை.
ஏ.சி. மற்றும் ஏர்கூலர் வைத்திருப்பவர்கள் வெட்டிவேர் தட்டிகளை வாங்கி அதில் பொருத்துவார்கள். சிலர் ஜன்னல் பகுதியில் வெட்டிவேர் தட்டிகளை கட்டி, அதில் சிறிது தண்ணீர் தெளிப்பார்கள். இதன்மூலம் அந்த அறை முழுவதும் மருத்துவ குணத்துடன் கூடிய நறுமணம் வீசும்.
நிவாரண உதவி
ஆஸ்துமா நோய் உள்ளவர்களும் வெட்டிவேர் தட்டிகளை வாங்கி செல்வார்கள். இந்த கோடை மற்றும் காற்று வீசும் காலத்தில் இந்த வகை தட்டிகள் அதிக விற்பனை ஆகும். ஆனால் தற்போது இவை எதுவும் விற்பனை இல்லாமல் தொழில் முடங்கி கிடக்கிறது.
மூங்கில் இயற்கையான மருத்துவ குணம் வாய்ந்த பொருள் ஆகும். கொரோனாவை கண்டு பயப்படாமல் அனைவரும் மூங்கில் பொருட்களை வாங்கி பயன்படுத்தலாம். இது பிளாஸ்டிக்கைவிட நலன் பயக்கக்கூடியது. சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்காது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் கைத்தொழில் செய்யும் எங்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். பொதுமக்களும் எங்களிடம் பொருட்களை வாங்குவதன் மூலம் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story