அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க இடம் தேர்வு தலைமை கொறடா ஆய்வு
அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க தேர்வு செய்துள்ள இடத்தினை அரசு தலைமைக்கொறடா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூர்,
அரியலூரில் அரசு கலைக்கல்லூரி அருகிலுள்ள காலி இடத்தில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படவுள்ளது. மருத்துவக்கல்லூரி அமைக்க தேர்வு செய்துள்ள இடத்தினை அரசு தலைமைக்கொறடா தாமரை ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமையில் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது அரசு தலைமை கொறடா கூறியதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களுக்கு சென்று மருத்துவ பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது நமது மாவட்டத்திலே சிறப்பு வாய்ந்த மருத்துவக்கல்லூரி அமைய உள்ளதால், அவசர சிகிச்சைகளுக்கோ, மேல் சிகிச்சைகளுக்கோ வெளி மாவட்டங்களுக்கு செல்லாமல் நமது மாவட்டத்திலே மருத்துவ சிகிச்சைகள் பெற்றுக்கொள்ளலாம்.
அரியலூர் மாவட்ட பொதுமக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க முதல்- அமைச்சர் உத்தரவிட்டு, நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளார். அதன்படி, 26 ஏக்கர் பரப்பளவில் ரூ.347 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டிடம், அலுவலகக் கட்டிடங்கள், குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவை கட்டப்படவுள்ளது. தமிழக முதல்- அமைச்சர் விரைவில் அடிக்கல் நாட்டிய உடன் கட்டுமான பணிகள் தொடங்கி, விரைந்து முடிக்கப்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி பயன்பாட்டிற்கு வர உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர், அரசு மருத்துவக்கல்லூரி தலைவர் முத்துகிருஷ்ணன், செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் காந்தரூபன், தலைமை மருத்துவர் ரமேஷ், தாசில்தார் சந்திரசேகரன் மற்றும் பொதுப்பணித்துறையினர், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story