நெல்லை மாநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் கலெக்டர் ஷில்பா உத்தரவு


நெல்லை மாநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் கலெக்டர் ஷில்பா உத்தரவு
x
தினத்தந்தி 9 Jun 2020 7:46 AM IST (Updated: 9 Jun 2020 7:46 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி‘ திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டார்.

நெல்லை, 

நெல்லை மாநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி‘ திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டார்.

ஆய்வு கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நெல்லை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளரும், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளின் நிர்வாக இயக்குனருமான கண்ணன், முதன்மை செயல் அலுவலர் நாராயண நாயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா பேசியதாவது:-

நெல்லை மாநகராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதன் அடிப்படையில், இந்த மாநகராட்சியை ‘ஸ்மார்ட் சிட்டியாக‘ தேர்வு செய்யப்பட்டு, அதன்படி 59 வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் 7 பணிகள் முடிக்கப்பட்டு விட்டது. 20 பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் 19 பணிகளுக்கான ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு உள்ளது. இதுதவிர 13 பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விரைந்து முடிக்க வேண்டும்

இந்த பணிகள் கொரோனா ஊரடங்கால் தாமதம் ஆகிவிட்டது. இருந்த போதிலும் தற்போது அரசு வழிகாட்டும் நெறிமுறைகளின்படி, இந்த பணிகளை விரைவுபடுத்தும் வகையில், தாமிரபரணி நதி அழகுபடுத்தும் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் 2 பணிகளுக்கான தடையின்மை சான்றை வழங்க பொதுப்பணித்துறை விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகர சாலைகளில் போக்குவரத்து குறியீடுகள் (டிராபிக் சிக்னல்ஸ்) பணியை மாநகராட்சி நிர்வாகம் விரைந்து முடிக்க வேண்டும். அதே போன்று வணிக வளாகம், புதிய பஸ் நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணிக்கு தோண்டப்படும் மண்ணை அப்புறப்படுத்த கனிம வளத்துறை உடனடியாக தடையின்மை சான்று வழங்க வேண்டும்.

சூரியஒளி மின்திட்டம்

பழையபேட்டை மின் நிலையத்துக்கு எதிரில் 3 மெகாவாட் சூரியஒளி மின்திட்டம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். டவுன் நேதாஜி போஸ் மார்க்கெட்டில் உள்ள கடைகள் இடிக்கப்பட உள்ளதால் மின்சார இணைப்பை துண்டிக்க வேண்டும். மேலும் அனைத்து துறை அதிகாரிகளும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க தங்களது துறை சார்பிலான நடவடிக்கைகளை விரைந்து முடித்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story