சென்னிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா ரத்து : பக்தர்கள் வேதனை


சென்னிமலை முருகன் கோவில் நடை சாத்தப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.
x
சென்னிமலை முருகன் கோவில் நடை சாத்தப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 5 Jun 2020 12:06 PM IST (Updated: 5 Jun 2020 12:06 PM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று வைகாசி விசாகத்திருவிழா நடைபெறாததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

சென்னிமலை,

பிரசித்திபெற்ற சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் விசாக திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதற்காக அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழுவினர் சார்பில் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருவார்கள்.

பின்னர் சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து தீர்த்த குடங்களுடன் படிக்கட்டுகள் வழியாக முருகன் கோவிலுக்கு சென்று அங்கு விநாயகர் பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கி கலச அபிஷேகம் மற்றும் 108 சங்கு பூஜை ஆகியவை நடைபெறும். மேலும், பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜையும், மாலையில் சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெறும்.

அதைத்தொடர்ந்து சாமிகள் புறப்பாடு நடைபெறும். இதில் சென்னிமலை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிகழ்வுகள் அனைத்தும் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. ஆனால் இந்த ஆண்டு கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தொடர்ந்து 70 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. இதனால் சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம், தமிழ் புத்தாண்டு, அக்னி நட்சத்திர விழா போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் இந்த ஆண்டு நடைபெறவில்லை. ஆனால் தினமும் 6 கால பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தது.

கடந்த 1-ந் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என பலரும் எதிர்பார்த்தனர். அரசு அனுமதி அளித்தால் சென்னிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என விழா குழுவினர் மற்றும் முருக பக்தர்கள் ஆவலுடன் இருந்தனர்.

ஆனால் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளிக்காததால் முருக பக்தர்கள் வேதனை அடைந்தனர். சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு வழக்கம் போல் 6 கால பூஜைகள் மட்டுமே நடைபெற்றது. 

Next Story