ஊரடங்குக்கு மத்தியிலும் கேத்தி ரெயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணி மும்முரம்
ஊரடங்குக்கு மத்தியிலும் கேத்தி ரெயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஊட்டி,
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1908-ம் ஆண்டு ஊட்டி மலை ரெயில் இயக்கம் தொடங்கியது. ஊட்டி முதல் மேட்டுப்பாளையம் வரை ரெயில் பாதை 46.61 கிலோ மீட்டர் தூரம் ஆகும். நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி மலை ரெயில் மற்றும் ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்களை கடந்த 2015-ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய சின்னமாக அறிவித்து பெருமை சேர்த்தது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் மலை ரெயிலில் பயணம் செய்வதை விரும்புவார்கள்.
ஊட்டி அருகே கேத்தி ரெயில் நிலையம் பழமையானது. ஆங்கிலேயர்கள் கட்டிய கட்டிடத்தில் தற்போதும் செயல்பட்டு வருகிறது. இந்த ரெயில் நிலையத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி இணைந்து நடித்த மூன்றாம் பிறை திரைப்படம் எடுக்கப்பட்ட பின்னர், மிகவும் பிரபலம் அடைந்தது. இதற்கிடையே சமீபத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 2 மரங்கள் முறிந்து ரெயில் நிலைய மேற்கூரை மீது விழுந்தது. இதில் மேற்கூரை சேதம் அடைந்ததோடு, குறுக்காக அமைக்கப்பட்ட இரும்பு கம்பிகள் வளைந்தன.
புதுப்பிக்கும் பணி
இதனால் அழகாக இருந்த ரெயில் நிலையம் அலங்கோலமாக காட்சி அளித்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். இந்த நிலையில் கேத்தி ரெயில் நிலையத்தில் சேதம் அடைந்த மேற்கூரையை அகற்றி புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பழைய மேற்கூரைகள், இரும்பு கம்பிகள் பிரித்து அப்புறப்படுத்தப்படுகிறது. அதேபோல் நடைபாதையில் பதிக்கப்பட்ட கற்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
ஊரடங்கு உத்தரவால் மலை ரெயில் இயக்கம் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் நடைபாதையில் மரத்தில் இருந்து இலைகள் உதிர்ந்து கிடக்கின்றன. ஊரடங்கு காலத்தில் கேத்தி ரெயில் நிலையத்தில் டிக்கெட் பெறும் இடம், அலுவலகம் மற்றும் பயணிகள் காத்திருக்கும் இடத்தை புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நடைபாதையில் மழைநீர் தேங்காத வகையிலும், சுற்றுலா பயணிகள் கால் இடறாமல் இருக்கவும் அதற்கேற்ப கற்கள் பதிக்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story