‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி சமோசா விற்கும் சிறுவனிடம் செல்போனில் பேசிய மு.க.ஸ்டாலின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி சமோசா விற்கும் சிறுவனிடம் செல்போனில் பேசிய மு.க.ஸ்டாலின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Jun 2020 4:44 AM IST (Updated: 2 Jun 2020 4:44 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சமோசா விற்கும் சிறுவனிடம் செல்போனில் பேசிய மு.க.ஸ்டாலின், சிறுவனின் கல்வி செலவை ஏற்பதாக அறிவித்தார்.

தஞ்சாவூர், 

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சமோசா விற்கும் சிறுவனிடம் செல்போனில் பேசிய மு.க.ஸ்டாலின், சிறுவனின் கல்வி செலவை ஏற்பதாக அறிவித்தார்.

சமோசா விற்கும் சிறுவன்

தஞ்சை மானோஜிப்பட்டி உப்பரிகை மண்டப பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள். கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திடீரென நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட வரதராஜனால் வேலைக்கு செல்ல முடியவில்லை. குடும்ப தலைவரின் வருமானம் இல்லாததால் அந்த குடும்பமே அல்லாடியது.

இதனால் துவண்டுபோன சுமதி நூற்கண்டு தயாரித்து சொற்ப வருமானம் ஈட்டி வந்தார். அதற்கும் கொரோனா ஊரடங்கு ஆப்பு வைத்தது. இதனையடுத்து வடை, போண்டா, சமோசா போன்ற உணவு பண்டங்களை சுமதி தயாரித்தார். அவற்றை சைக்கிளின் பின்னால் வைத்துக்கொண்டு சிறுவன் விஷ்ணு வீதி, வீதியாக சென்று விற்பனை செய்து வருகின்றான். தினமும் 10 கிலோ மீட்டர் தூரம் பல்வேறு இடங்களுக்கு சென்று குடும்பத்திற்காக உழைத்து வருகிறான்.

‘தினத்தந்தி’ யில் செய்தி

சின்னஞ்சிறு வயதில் குடும்ப பாரத்தை சுமக்கும் சிறுவன் விஷ்ணுவை பற்றிய செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் வெளியானது. மேலும் சிறுவனை பற்றிய விவரங்கள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு சென்றது. உடனே தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின் அந்த சிறுவனின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதன்படி நேற்று சிறுவன் விஷ்ணுவின் வீட்டிற்கு துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் சிலர் நேரில் சென்றனர். பின்னர் அந்த குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், துணிமணிகள், ரூ.5 ஆயிரம் நிவாரண நிதியை வழங்கினர். தொடர்ந்து எம்.எல்.ஏ., தனது செல்போனில் இருந்து மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு நிவாரண உதவி வழங்கிய விவரத்தை கூறினார்.

செல்போனில் பேசிய ஸ்டாலின்

உடனே சிறுவன் விஷ்ணு மற்றும் அவரது தாய் சுமதியிடம் மு.க.ஸ்டாலின் செல்போன் மூலம் பேசி, தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும், சிறுவனின் கல்வி செலவு முழுவதையும் ஏற்பதாகவும் உறுதி அளித்தார். இதனால் சிறுவனின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story