8-ந் தேதி கள்ளழகர் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகள் விவரம்
மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க 8-ந் தேதி கள்ளழகர் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன.
அழகர்கோவில்,
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆகமவிதிப்படி கோவில் வளாகத்தில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளழகர் மதுரைக்கு புறப்படுவது, எதிர் சேவை, வைகை ஆற்றில் எழுந்தருள்வது, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருவது, தசாவதாரம், பூப்பல்லக்கு உள்ளிட்ட அனைத்து மதுரை நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும் பக்தர்கள் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் பல நூறு ஆண்டுகளாக இடைநில்லாமல் நடைபெற்ற உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா இந்த வருடம் கோவில் வளாகத்தில் வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று ஆகமவிதிப்படி நடைபெற உள்ளது.
இதையொட்டி அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை விசுவரூபம் நடைபெறும். அதன்பின்னர் கள்ளழகர் ஆண்டாள் சன்னதி முன்பாக எழுந்தருள்கிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு எதிர் சேவை, அலங்கார சேவை, 10 மணிக்கு தங்கக்குதிரை வாகன சேவையும், 12 மணிக்கு சைத்ரோ உபசார சேவையும் நடைபெறும்.
தொடர்ந்து அன்று பகல் 1.30 மணிக்கு சேஷ வாகன புறப்பாடு, மாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் கருட சேவையும், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தல் மற்றும் புராணம் வாசித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு புஷ்ப பல்லக்கு, இரவு 8 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் இருப்பிடம் செல்லுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சிகளை பக்தர்கள் நேரில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
இதற்கான ஏற்பாடுகளை அரசின் ஆலோசனைப்படி கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் திருக்கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story