திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 6 பேர் குணமடைந்தனர்


திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 6 பேர் குணமடைந்தனர்
x
தினத்தந்தி 22 April 2020 7:56 AM IST (Updated: 22 April 2020 7:56 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

திருச்சி, 

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தடை செய்யப்பட்ட 25 இடங்கள்

கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக திருச்சி மாநகராட்சி பகுதியில் 14 இடங்களும், நகராட்சியில் 1 இடமும், பேரூராட்சி பகுதியில் 3 இடங்களும், ஊரகப்பகுதியில் 7 இடங்களும் என மொத்தம் 25 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதில் 36 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் 707 பேரின் ரத்தம் மற்றும் சளி ஆய்வுக்காக எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 348 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என அறிக்கை வந்துள்ளது. இன்னும் 359 பேருக்கு அறிக்கை வரவேண்டியதுள்ளது.

6 பேர் வீடு திரும்பினர்

திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 29 பேர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 32 பேர், பூரண குணமாகி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினர்.

அதன்பின்னர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 21 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தனர். இந்த நிலையில் அவர்களில் 6 பேர் நேற்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். அவர்கள் திருச்சி பீமநகர், காஜாநகர், கே.கே.நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பேரும், மேலும் அன்பில், துவரங்குறிச்சி, புத்தாநத்தம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பேரும் ஆவர்.

பழங்கள் கொடுத்து வழியனுப்பினர்

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மேற்கண்ட 6 பேரும் கடந்த மாதம் 31-ந் தேதி அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர், 20 நாட்களுக்கு மேலாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

‘டிஸ்சார்ஜ்’ ஆன 6 பேரையும் திருச்சி அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் வனிதா தலைமையில் மருத்துவ கண் காணிப்பாளர் ஏகநாதன், முதன்மை மருத்துவ அதிகாரி சதீஷ்குமார் மற்றும் டாக்டர், செவிலியர் குழுவினர் பழங்கள் அடங்கிய தட்டுடன் வழியனுப்பி வைத்தனர்.

15 பேர் தொடர் சிகிச்சை

இதுதொடர்பாக டீன் வனிதா கூறும்போது, ‘திருச்சி மாவட்டத்தில் உள்ள 21 பேர் கொரோனா தொற்றுக்காக அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 6 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 15 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவர், அரியலூரை சேர்ந்த 2 பேர், பெரம்பலூரை சேர்ந்த 3 பேர் என 6 பேரும் கொரோனா தொற்றுக்காக தொடர் சிகிச்சையில் இருக்கிறார்கள்’ என்றார்.

Next Story