தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர் காய்ச்சலால் 33 பேர் அனுமதி


தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர் காய்ச்சலால் 33 பேர் அனுமதி
x
தினத்தந்தி 30 March 2020 3:15 AM IST (Updated: 30 March 2020 8:24 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர் காய்ச்சலால் 33 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி வெளிநாடுகளில் இருந்து தஞ்சை மாவட்டத்திற்கு வந்த 4 ஆயிரத்து 961 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை டாக்டர்கள் குழுவினர் தினமும் கண்காணித்து வருகின்றனர். இவர்களுடன் 28 நாட்களுக்கு யாரும் தொடர்பு வைத்து கொள்ளக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மேற்கிந்திய தீவில் பணியாற்றி விட்டு சொந்த ஊருக்கு திரும்பிய கும்பகோணத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிப்பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது வீடு இருக்கும் பகுதிகள் சீல் வைக்கப்பட்டு அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் இருக்கிறதா? என டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து வருகின்றனர்.

மேலும் தஞ்சை மாவட்டத்தில் தொடர் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட 13 பெண்கள் உள்பட 33 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களது ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு திருவாரூரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பரிசோதனையின் முடிவு வந்தால் தான் இவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியவரும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story