பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி கொரோனா மருத்துவமனையில் போதிய வசதிகள் - துணை இயக்குனர் தகவல்
பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி கொரோனா மருத்துவமனையில் போதிய வசதிகள் உள்ளன என்று சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறினார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ள 5 பேர், தீவிர கண்காணிப்பில் உள்ளவர்கள் மற்றும் சந்தேகத்துக்கு இடமானவர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை 300 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து மருத்துவமனைக்கு கூடுதல் பணியாளர்கள், டாக்டர்கள் உள்ளிட்ட யாரும் நியமிக்கப்படவில்லை. எனவே இது நோயாளிகளுக்கு பாதிப்பு தருமா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. மேலும், செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
இதுபற்றி ஈரோடு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறும்போது, ‘பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முற்றிலும் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு உள்ளது. இங்கு ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். எனவே இது முற்றிலும் கொரோனா தொற்று உடையவர்களுக்காகவே செயல்படுகிறது.
இது மருத்துவ கல்லூரி என்ற அடிப்படையில் டாக்டர்கள், மருத்துவ பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள் என்று தேவையானவர்கள் இங்கு இருக்கிறார்கள். மருத்துவ பணியாளர்களும் தேவைக்கு இருக்கிறார்கள். செவிலியர்கள் தொடர்பான தகவல்கள் வெளிவந்ததும், அது உயர் அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இப்போது அனைத்து தரப்பினரும் முழு மனதுடன் தங்கள் சேவைப்பணியை செய்து வருகிறார்கள். டாக்டர்கள் உள்பட போதிய வசதிகள் அனைத்தும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் உள்ளது’ என்றார்.
Related Tags :
Next Story