ஹோலி பண்டிகை உற்சாக கொண்டாட்டம் ‘கொரோனா வைரஸ்' பொம்மைகள் எரிப்பு


ஹோலி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்   ‘கொரோனா வைரஸ் பொம்மைகள் எரிப்பு
x
தினத்தந்தி 11 March 2020 5:11 AM IST (Updated: 11 March 2020 5:11 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் ‘கொரோனா வைரஸ்' பொம்மைகள் எரிக்கப்பட்டன.

மும்பை, 

வசந்தகாலத்தை, வண்ணங்களால் வரவேற்கும் விதமாக வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். மராட்டியத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் ஹோலி கொண்டாட்டம் தொடங்கியது. குறிப்பாக மும்பை, தானே, பால்கர், புனே மாவட்டங்களில் ஹோலி பண்டிகையை மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

பொதுமக்கள் மரக்கட்டை, வைக்கோல், மாட்டு சாணம் மற்றும் பழைய பொருட்களால் அமைக்கப்பட்ட ஹோலிகா அரக்கியை வீதிகளில் எரித்தனர். அப்போது, வீடுகளில் பூஜை செய்து எடுத்து வந்த தேங்காயை அந்த தீயில் வீசி கடவுளை வழிபட்டனர். இவ்வாறு செய்தால் தீயில் எரியும் தேங்காயுடன் தங்களது துன்பங்களும் நீங்கும் என மக்கள் நம்புகின்றனர்.

‘கொரோனா வைரஸ்’ பொம்மைகள்

இந்த ஆண்டு மும்பை ஒர்லி உள்ளிட்ட பல இடங்களில் உலகையே அச்சுறுத்தி வரும் ‘கொரோனாவைரஸ்' அரக்கி மற்றும் அரக்கன் பொம்மைகளை மக்கள் எரித்தனர். இதேபோல வறுமை, வறட்சி, வேலைவாய்ப்பின்மை போன்ற அரக்கி பொம்மைகளும் எரிக்கப்பட்டன. ஹோலிகா அரக்கி எரிப்பு நிகழ்வுக்கு பின்னர் மக்கள் வீடுகளுக்கு சென்று பூரன் போலி எனும்இனிப்பு தயாரித்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

ஹோலி பண்டிகை தினமான நேற்று காலை முதல் உறவினர்கள், நண்பர்கள் மீது ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை தூவி ஹோலியை கொண்டாடி மகிழ்ந்தனர். அடுக்குமாடி கட்டிடங்கள், குடிசைப்பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் ஹோலி பண்டிகை களைகட்டியிருந்தது.

பெரும்பாலானவர்கள் வண்ணப்பொடிகள் பூசப்பட்ட முகங்களுடன் தான் சுற்றித்திரிந்தனர். பலர் வண்ணப்பொடியை உடல் முழுவதும் பூசிக்கொண்டு அலைந்ததையும் காண முடிந்தது.

கூட்டம் குறைந்தது

வழக்கமாக ஹோலி பண்டிகையின் போது தாதர் சிவாஜிபார்க், ஜூகு, கிர்காவ், வெர்சோவா போன்ற கடற்கரைகளில் பொதுமக்கள் அதிகளவில் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். இந்த ஆண்டு ‘கொரோனா வைரஸ்’ அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்த்தனர். இதனால் ஹோலி கொண்டாட்டத்துக்காக வழக்கமாக அதிகம் கூடும் இடங்களில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

மும்பை கிர்காவ் கடற்கரையில் முதியவர்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் பூக்களை தூவி ஹோலியை கொண்டாடினர்.

பாதுகாப்பு

முன்னதாக நேற்று மும்பை, தானேயில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதிகளில் அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

இதேபோல ரெயில் பயணிகள் மீது தண்ணீர் பலூன் தாக்குதல்கள் நடத்தப்படுவதை தடுக்க ரெயில்வே போலீசார் தண்டவாளத்தையொட்டி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Next Story