எய்ம்ஸ் மருத்துவமனையால் புதிய முனையமாகும் திருப்பரங்குன்றம் ரெயில் நிலையம்


எய்ம்ஸ் மருத்துவமனையால் புதிய முனையமாகும் திருப்பரங்குன்றம் ரெயில் நிலையம்
x
தினத்தந்தி 25 Feb 2020 3:51 AM IST (Updated: 25 Feb 2020 3:51 AM IST)
t-max-icont-min-icon

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதால் திருப்பரங்குன்றம் ரெயில் நிலையம் புதிய முனையமாக அமைய உள்ளது.

திருப்பரங்குன்றம்,

மதுரை தோப்பூர் ஊராட்சியில் உள்ள கோ.புதுப்பட்டியில் 199 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி செலவில் தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பான எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இந்த மருத்துவமனைக்கு மக்கள் வந்து செல்வதற்கு வசதியாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் ரெயில் நிலையம், விமான நிலையம், நான்கு வழிச்சாலை இருக்க வேண்டும் என்பது மத்திய சுகாதார துறையின் நிபந்தனை ஆகும். இதன் அடிப்படையில் தான் தோப்பூர் கோ.புதுப்பட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலை நீண்ட காலமாக இருந்து வந்தது.

ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள நிலையில் தற்போது திருப்பரங்குன்றம் ரெயில் நிலையத்தில் முதற்கட்டமாக ரூ.4 கோடியில் சகல வசதிகளுடன் கூடிய முன் மாதிரி ரெயில் நிலைய கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. திட்டமிட்டபடி இன்னும் 3 மாதங்களில் கட்டுமான பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் ரெயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பழைய கட்டிடம் முழுவதுமாக அகற்றப்பட உள்ளது. மேலும் எய்ம்ஸ் மருத்துவமனையை கருத்தில் கொண்டு ரெயில்கள் நிறுத்தக்கூடிய முனையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணியும் நடந்து வருகிறது.

புதிய ரெயில் முனையம்

இதையொட்டி விரைவில் திருப்பங்குன்றம் ரெயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் முனையத்திற்கான புதிய தண்டவாளங்கள் அமைக்கப்படும் என்று தெரிகிறது. திருப்பரங்குன்றம் ரெயில் நிலையத்தில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக அனைத்து பயணிகள் ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நடைமுறைக்கு வரவில்லை.

இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையால் மதுரைக்கு அடுத்தபடியாக திருப்பரங்குன்றம் ரெயில் நிலையம் புதிய முனையமாக அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story