மு.க.ஸ்டாலின் தலைமையில் கொளத்தூரில் பொங்கல் விழா துர்கா ஸ்டாலின் பொங்கலிட்டார்
சென்னை கொளத்தூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் விழா நடந்தது. துர்கா ஸ்டாலின் பொங்கலிட்டார்.
சென்னை,
சென்னை கொளத்தூரில் உள்ள அனித அச்சீவர்ஸ் அகா டமி வளாகத்தில் அப்பகுதி தி.மு.க.வினரின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நேற்று மாலை நடந்தது. இதில் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வான தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்காவுடன் கலந்துகொண்டார்.
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவரது மனைவி துர்கா, புதுப்பானையில் பொங்கலிட்டு, அனைவருக்கும் வழங்கினார். பின்னர் அப்பகுதி பெண்கள் பல்வேறு விழிப்புணர்வுகளை முன்னிறுத்தி போட்ட கோலங்களை மு.க.ஸ்டாலின், தனது மனைவியுடன் பார்வையிட்டார்.
விழாவில், மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- கொளத்தூர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை, குறைகளை நேரடியாக வந்து சந்தித்துக் கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்து வருகிறேன். என்னுடைய பொதுவாழ்வில் எத்தனையோ மறக்க முடியாத, நெஞ்சை விட்டு அகலாத நிகழ்வுகள் பல உண்டு.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் அவரவர் தொகுதியில் வேலை இல்லாமல் தவிப்போருக்கு பயிற்சி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் முயற்சியில் ஈடுபடவேண்டும் என தொடர்ந்து நான் அறிவுறுத்தி வருகிறேன்.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம். பொங்கல் நாளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், பல மாவட்டங்கள், ஊர்களில் இருந்து வரக்கூடிய தொண்டர்களை, மக்களை நான் சந்திக்க இருக்கிறேன். உங்கள் அத்தனை பேருக்கும் முன்கூட்டியே தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடனும், பூரிப்புடனும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story