திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு : கோவிந்தா, கோவிந்தா கோ‌‌ஷத்துடன் பக்தர்கள் தரிசனம்


திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு : கோவிந்தா, கோவிந்தா கோ‌‌ஷத்துடன் பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 7 Jan 2020 3:15 AM IST (Updated: 7 Jan 2020 1:58 AM IST)
t-max-icont-min-icon

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா கோ‌‌ஷத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர்.

திருமயம், 

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் பிரசித்தி பெற்ற சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சொர்க்கவாசல் திறப்பு வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணியளவில் திருப்பள்ளி எழுச்சியும், திருப்பாவை சேவை காலமும் நடைபெற்றது. தொடர்ந்து ஆனந்த சயனம் அலங்காரமும், விஸ்வரூப தரிசனமும் நடைபெற்றது.

பின்னர் அதிகாலை 4 மணியளவில் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு பெருமாள் காட்சி அளித்தார். பின்னர் சத்தியமூர்த்தி பெருமாளுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சத்திய மூர்த்தி பெருமாளை சொர்க்கவாசலுக்கு அருகே பக்தர்கள் பல்லக்கில் கொண்டு வந்தனர்.

சுமார் காலை 5.30 மணியளவில் சத்தியமூர்த்தி பெருமாள் ஆழ்வாருக்கு மோட்சம் கொடுக்க, பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா என கோ‌‌ஷம் முழங்க சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டு, மலர் தூவப்பட்டது. பின்னர் மேள தாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட சத்தியமூர்த்தி பெருமாளை பக்தர்கள் பல்லக்கில் சொர்க்கவாசல் வழியாக தூக்கி கொண்டு சென்றனர். தொடர்ந்து சத்தியமூர்த்தி பெருமாள் பு‌‌ஷ்ப ஊரணி வழியாக வசந்த மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டு, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதில் திருமயம், புதுக்கோட்டை, நமணசமுத்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு துளசிநீர் பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து சத்தியமூர்த்தி பெருமாள் வீதிஉலா நடைபெற்றது. பக்தர்களின் வசதிக்காக புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் கலெக்டர் உமா மகேஸ்வரி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள், களப்பணியாளர்கள் செய்திருந்தனர்.

புதுக்கோட்டை கீழ 3-ம் வீதியில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக வரதராஜ பெருமாளுக்கு மஞ்சள், பால், தயிர் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. இதன்பின் அதிகாலை 5 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, வரதராஜ பெருமாளை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தூக்கி வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல புதுக்கோட்டை சாக்குகடை வீதியில் உள்ள விக்டோபா பெருமாள் கோவில், பழனியப்பாநகரில் உள்ள பெருமாள் கோவில் உள்பட நகரில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல திருவரங்குளம் அருகே உள்ள மேட்டுப்பட்டியில் உள்ள ராமானுஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி ராமானுஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து ராமானுஜ பெருமாள் சொர்க்கவாசல் வழியே வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அரிமளம் செட்டி ஊரணியில் உள்ள சுந்தரராஜபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட சுந்தரராஜ பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல மார்க்கெட் சீனிவாச பெருமாள் கோவில், கடையக்குடி பிரசன்னநாத பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கீரனூர் அருகே உள்ள குளத்தூர் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சொர்க்கவாசல் வழியாக பெருமாள் வெளியே வந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல மலையடிப்பட்டி கண்நிறைந்த பெருமாள் கோவிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விராலிமலை அருகே உள்ள விராலூரில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சீனிவாச பெருமாளுக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து சீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் விராலிமலை, விராலூர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆவுடையார்கோவில் அருகே உள்ள பரமந்தூர் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஆதிகேசவ பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆவுடையார்கோவில் வடநகர் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை சிவயோக நாராயண பெருமாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல் மணமேல்குடி ஆதிகேசவபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்புவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story