தூத்துக்குடியில் கடலில் நிறுத்தப்பட்டு இருந்த நாட்டுப்படகு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


தூத்துக்குடியில் கடலில் நிறுத்தப்பட்டு இருந்த நாட்டுப்படகு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Jan 2020 10:15 PM (Updated: 1 Jan 2020 8:15 PM)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கடலில் நிறுத்தப்பட்டு இருந்த நாட்டுப்படகு திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர்காலனியை சேர்ந்தவர் மாணிக்க இசக்கிமுத்து மகன் விக்கிரமாதித்தன் (வயது 40). இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் நேற்று முன்தினம் மீனவர்கள் சங்கு குளிக்க சென்றனர். மாலை 4.30 மணிக்கு கரைக்கு திரும்பிய மீனவர்கள் தெர்மல்நகர் கடற்கரைக்கு வந்தனர். அங்கு கரையில் இருந்து சிறிது தூரத்தில் கடலில் படகை நங்கூரமிட்டு நிறுத்திவிட்டு கரைக்கு வந்து விட்டனர்.

இந்த நிலையில் இரவில் திடீரென அந்த படகு தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கடலுக்குள் சென்று, படகில் பற்றி எரிந்து கொண்டு இருந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். எனினும் படகின் பெரும்பாலான பகுதி எரிந்து நாசமானது. இதன் சேத மதிப்பு ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், படகில் உள்ள என்ஜின் சூடு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Next Story