தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஒன்றியங்களில் வெங்காய பயிரில் வேர்ப்புழு தாக்குதல் - விளைச்சல் பாதிப்பு
தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஒன்றியங்களில் வெங்காய பயிரில் வேர்ப்புழு தாக்குதல் ஏற்பட்டதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
சத்திரப்பட்டி,
தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் பெரும்பான்மையான நிலங்களில் மானாவாரியாக மக்காச்சோளம், பருத்தி, பயறு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் நன்றாக மழை பெய்து, கிணற்றில் நீர்மட்டம் உயர்ந்தால் நெல் பயிரிடப்படுகிறது. இதுமட்டுமின்றி கிணற்று நீர் மூலம் வெங்காயம், காய்கறி சாகுபடியும் நடந்து வரு கிறது. இந்தநிலையில் ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றிய பகுதிகளில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து சத்திரப்பட்டி, தா.புதுக்கோட்டை, கள்ளிமந்தயம், கரியாம்பட்டி உள்ளிட்ட ஊர்களில் ஏராளமான விவசாயிகள் வெங்காயம் நடவு செய்துள்ளனர்.
நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்வால் மக்கள் திண்டாடி வந்தனர். இதையடுத்து வெங்காய உற்பத்தியை அதிகரிக்க அரசு தேவையான முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வெங்காய பயிரில் வேர்ப்புழு தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வெங்காய பயிர்கள் வாடி வருகின்றன. இந்த புழு ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு எளிதாக பரவி விடுகிறது. எனவே விளைச்சல் பாதிக்கும் சூழல் நிலவுகிறது. இதைக்கருத்தில் கொண்டு தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஒன்றிய பகுதிகளில் வேர்ப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு போதிய ஆலோசனை வழங்க வேளாண்மை துறையினர் முன்வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story