நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் தொலைநோக்கி மூலம் சூரிய கிரகணத்தை ஆர்வமுடன் பார்த்த பொதுமக்கள்


நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் தொலைநோக்கி மூலம் சூரிய கிரகணத்தை ஆர்வமுடன் பார்த்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 27 Dec 2019 3:30 AM IST (Updated: 26 Dec 2019 11:14 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் தொலைநோக்கி மூலம் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். மேலும், கோவில்களில் நடை சாத்தப்பட்டது.

நெல்லை, 

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதே சூரிய கிரகணம் ஆகும். இந்த சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் பவுர்ணமி அன்றும் நிகழும்.

வானில் நிகழும் இந்த அற்புத நிகழ்வான சூரிய கிரகணம் நேற்று நடந்தது. காலை 8.09 மணிக்கு தொடங்கி, காலை 11.19 மணி வரை சூரிய கிரகணம் ஏற்பட்டது.

இந்த சூரியகிரகணத்தை காண, நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலை 7 மணிக்கே பொதுமக்கள் அறிவியல் மையம் முன்பு திரண்டனர். காலை 7.50 மணிக்கு அறிவியல் மையத்துக்குள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு 2 தொலைநோக்கிகள் (டெலஸ்கோப்) அமைக்கப்பட்டு இருந்தன. ஒன்றில் சோலார் பில்டர் பொருத்தப்பட்டு இருந்தது. மற்றொரு தொலைநோக்கி மூலம் பெரிய திரையில் சூரிய கிரகணம் தெரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு பொதுமக்கள், கல்லூரி மாணவ-மாணவர்கள், குழந்தைகள் ஆகியோர் வரிசையில் காத்து இருந்தனர்.

இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது. அவ்வாறு பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அறிவியல் மையத்துக்கு வந்தவர்களுக்கு மைலார் சீட் கண்ணாடி மற்றும் வெல்டிங் கிளாஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன.

ஏராளமாேனார் குடும்பத்துடன் வந்து இருந்தனர். முனைஞ்சிப்பட்டி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த மாணவிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஒட்டுமொத்தமாக வந்திருந்தனர். அனைவரும் டெலஸ்கோப் மூலம் சூரிய கிரகணத்தை பார்த்து ரசித்தனர்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட அறிவியல் மைய கல்வி அலுவலர் லெனின் கூறும் போது, “நெல்லையை பொறுத்த வரையில் 85 சதவீதம் சூரிய கிரகணம் தெரிந்தது. அறிவியல் மையத்தால் வழங்கப்பட்ட கண்ணாடி மூலம் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பொதுமக்கள், குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் ஆர்வமாக பார்த்து ரசித்தனர். நேற்று மட்டும் 1,864 பேர் வந்து பார்வையிட்டனர்’’ என்றார்.

சூரிய கிரகணத்தையொட்டி நெல்லை மாநகர பகுதியில் உள்ள கோவில்களில் காலையில் நடைகள் சாத்தப்பட்டது. நெல்லையப்பர் கோவில், நெல்லை சந்திப்பு சாலைக்குமார சுவாமி கோவில், நெல்லை டவுன் சந்தி விநாயகர் கோவில், பாளையங்கோட்டை சிவன்கோவில், மேலவாசல் சுப்பிரமணியர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் காலையில் நடை சாத்தப்பட்டது.

Next Story