நெல்லை கலெக்டர் அலுவலகத்தை தேவர் சமுதாயத்தினர் முற்றுகை - பொய் வழக்குகளை ரத்து செய்ய கோரிக்கை


நெல்லை கலெக்டர் அலுவலகத்தை தேவர் சமுதாயத்தினர் முற்றுகை - பொய் வழக்குகளை ரத்து செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 26 Dec 2019 10:45 PM GMT (Updated: 26 Dec 2019 5:44 PM GMT)

நெல்லை கலெக்டர் அலுவலகத்தை தேவர் சமுதாயத்தினர் முற்றுகையிட்டனர்.

நெல்லை, 

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த இசக்கிராஜா, அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக தலைவர் ஏ.எம்.மூர்த்தி, நேதாஜி சுபாஸ் சேனையை சேர்ந்த மகராஜன், தமிழ்நாடு தேவர் பேரவையை சேர்ந்த கார்த்திக், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்த ராம்குமார் உள்ளிட்டோர் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

பின்னர் மேற்கண்ட அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நெல்லை மாவட்ட கலெக்டர் ‌ஷில்பாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

எங்கள் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காக சில அமைப்புகளை வைத்து இருக்கிறோம். அந்த அமைப்புகள் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டு வருகின்றன.

எங்கள் சமுதாயத்தினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேறி வருகிறார்கள். இதை பொறுத்து கொள்ள முடியாத சிலர் எங்கள் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் மீது பொய்யான புகார்களை போலீஸ் அதிகாரிகளிடம் கூறி வருகிறார்கள்.

சம்பந்தம் இல்லாமல் எங்கள் அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. தென் மாவட்டங்களில் அதிக அளவு வழக்குகள் பதிவு செய்யப்படுவதால், எங்கள் சமுதாய இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு இந்த வழக்குகள் தடையாக இருக்கிறது.

சட்டம்- ஒழுங்கை காரணம் காட்டி எங்கள் சமுதாய தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இந்த பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story