நாங்குநேரியில் ஓய்வுபெற்ற வணிகவரித்துறை அதிகாரி வீட்டில் கொள்ளை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு


நாங்குநேரியில் ஓய்வுபெற்ற வணிகவரித்துறை அதிகாரி வீட்டில் கொள்ளை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 26 Dec 2019 4:00 AM IST (Updated: 26 Dec 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரியில் ஓய்வுபெற்ற வணிகவரித்துறை அதிகாரி வீட்டில் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாங்குநேரி, 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி உள்மாடவீதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ். வணிகவரித்துறையில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவருடைய மகன் பெங்களூருவில் உள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை மகனுடன் கொண்டாடுவதற்காக அந்தோணிராஜ் பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி அந்தோணிராஜிக்கு தகவல் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக அங்கிருந்து புறப்பட்டார். மேலும் இதுபற்றி நாங்குநேரி போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அங்கு வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடப்பதும், வீட்டின் உள்ளே பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்ததும் தெரியவந்தது.

அந்தோணிராஜ் வெளியூர் சென்றதை நன்கு அறிந்த மர்மநபர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம் என தெரிகிறது. மேலும் அந்தோணிராஜ் ஊருக்கு வந்த பின்னர் தான் கொள்ளை போன பொருட்களின் விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் நெல்லையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து, அங்கு பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story